தலைநகர் டெல்லியில் கார் வெடித்துச் சிதறிய சம்பவத்தில் 10பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தலைநகர் டெல்லியில் உள்ள செங்கோட்டை அருகே அமைந்துள்ள மெட்ரோ ரயில் நிலையத்தின் நுழைவாயில் பகுதியில் சாலையில் கார் ஒன்று திடீரென வெடித்து தீப்பிடித்து எரிந்தது. இந்த வெடிப்புச் சம்பவத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதையடுத்து, அந்தப் பகுதியில் பரபரப்பு நிலவுகிறது. இது விபத்தா அல்லது சதிச் செயலா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்தச் சம்பவத்தில் பலர் காயமடைந்த நிலையில், அங்கு உச்சகட்ட பாதுகாப்பு காரணமாக பதற்றம் நீடிக்கிறது.

டெல்லியில் பாதுகாப்பு பலமாக உள்ள பகுதிகளில் ஒன்று செங்கோட்டை. இந்தப் பகுதிக்கு உள்ளூர் மக்கள், சுற்றுலா வாசிகள் உட்பட பலர் வந்து செல்வது வழக்கம். மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதி இது. இந்தச் சூழலில் நேற்று (நவ.10) மாலை 6.52 மணி அளவில் அந்த மெட்ரோ ரயில் நிலையத்தின் ‘கேட் 1’ நுழைவாயில் பகுதியில் கார் ஒன்று திடீரென வெடித்து தீப்பிடித்து எரிந்தது. அப்போது வெடிச் சத்தம் கேட்டதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். இந்தப் பகுதியில் அங்காடிகளும் அதிகம் நிறைந்துள்ளன.
இந்தச் சம்பவத்துக்கு பிறகு தீயணைப்பு படையினர் மற்றும் காவல் துறைக்கு இதுகுறித்த தகவல் கிடைத்தது. உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்த சென்ற தீயணைப்பு படையினர் அந்தப் பகுதிக்குச் சென்று தீயை அணைத்தனர். மேலும் காவல் துறையினர் அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகள் மற்றும் அருகில் இருந்து சம்பவத்தை நேரில் பார்த்தவர்களிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இது விபத்தா அல்லது சதிச் செயலா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், சம்பவ இடத்தில் தடயவியல் நிபுணர்கள், வெடிகுண்டு பரிசோதனை நிபுணர்கள், தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.
இந்தச் சம்பவத்தில் சாலையில் இருந்த 5-க்கும் மேற்பட்ட வாகனங்கள் வரை தீப்பிடித்து எரிந்தன. இதில் 8 பேர் உயிரிழந்ததாகவும், 24க்கும் மேற்பட்டோர் காயமடைந்து அருகில் உள்ள எல்என்ஜேபி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. காயமடைந்தவர்கள் அனைவரும் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இதுகுறித்த முதற்கட்ட விசாரணை நடைபெற்று வருகிறது.

இதையடுத்து டெல்லியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக, சென்னை, மும்பை, பெங்களூர், உத்திரபிரதேசம் உள்ளிட்ட முக்கிய நகரங்களிலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கார் விபத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் ஆகியோர் முக்கிய ஆலோசனை மேற்கொண்டனர்.
டெல்லி கார் வெடிப்பு தொடர்பாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்ததாவது,’ நடந்த சம்பவத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. ஒருவரின் கை துண்டாகி சாலையில் இருந்தது. என்னால் இதற்கு மேல் பேச முடியவில்லை’, ‘இங்கு என்ன நடந்தது என்றே எங்களுக்கு புரியவில்லை. அங்கும் இங்குமாக மனித உடல்களின் பாகங்கள் சிதறி கிடந்தன. வாகனங்கள் தீப் பிடித்து இருந்தன’, ‘இந்த அளவுக்கு எனது வாழ்வில் நான் கேட்டது கிடையாது. அந்த சப்தம் அப்படி இருந்தது. மொத்தம் மூன்று முறை அதை நான் உணர்ந்தேன். நாங்கள் எல்லோரும் உயிரிழந்து விடுவோம் என நினைத்தோம்’, ‘எங்கள் வீடு அருகில் தான் உள்ளது. மாடியில் இருந்து பார்த்த போது சாலையில் தீப்பிடித்து எரிந்ததை பார்த்தேன்’ என சம்பவத்தை நேரில் கண்ட டெல்லிவாசிகள் தெரிவித்தனர்.

டெல்லியில் கார் வெடிப்பு தொடர்பாக தமிழ்நாட்டில் உள்ள முக்கிய ரயில் நிலையங்களான செண்ட்ரல், எழும்பூர், தாம்பரம் உள்ளிட்ட ரயில் நிலையங்கள் மற்றும் கோயம்பேடு, கிளாம்பாக்கம் உள்ளிட்ட பேருந்து நிலையங்கள் மற்றும் தமிழகம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டு தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “கார் வெடிவிபத்து தொடர்பாக காவல் ஆணையருடன் தொடர்பில் இருந்து தகவல்களை கேட்டறிந்தேன். கார் வெடித்தது குறித்து அனைத்துக் கோணங்களிலும் விசாரணை நடத்தப்படும். சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை சேகரிக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
கார் வெடிப்பு சம்பவம் நடந்த இடத்துக்கும், படுகாயம் அடைந்தவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனைக்கும் சென்று விசாரணை நடத்தப்படும். கார் வெடி விபத்துக்கு பின்புலத்தில் செயல்பட்டவர்கள் யார் என்பதை விசாரணை நடத்தி முழு உண்மையை மக்கள் முன்பு வைப்போம்” எனக் குறிப்பிட்டார்.

இதையடுத்து, இந்த கார் வெடிப்பு சம்பவத்தில் படுகாயமடைந்து எல்என்ஜேபி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களை, உள்துறை அமைச்சர் அமித்ஷா நேரில் சென்று பார்த்து ஆறுதல் கூறி, அவர்களுக்கு சிறந்த மருத்துவம் அளிக்க மருத்துவர்களிடம் கூறினார்.

Leave a Reply