‘துள்ளுவதோ இளமை’ பட நடிகர் அபினய் உடல்நலக் குறைவால் காலமானார்
துள்ளுவதோ இளமை படத்தில் தனுஷ் உடன் நடித்த நடிகர் அபினய், கடுமையான கல்லீரல் தொடர்பான உடல்நலப் பிரச்சனைகளால் போராடி வந்தார்.
இந்நிலையில், நடிகர் அபினய் நேற்று(நவ.10) அதிகாலை 4 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். நடிகர் அபினயின் மறைவுக்கு திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
44 வயதான அபினய் வேலை இன்றி, தனியாக வாழ்க்கையை நடத்தி வந்தார். உடல்நலமும், பொருளாதாரமும் பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சைக்கான செலவுகள் கூட சமாளிக்க முடியாத சூழ்நிலை அவருக்கு ஏற்பட்டது.

அபினயின் சிகிச்சைக்காக திரைத்துறையை சேர்ந்த பலரும் உதவி செய்து வந்தனர். அந்த வகையில். நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி, பின்னர் ஹீரோவாக மாறிய பாலா, அபினயை நேரில் சந்தித்து நிதி உதவி வழங்கியிருந்தார். நடிகர் தனுஷ் நிதி உதவியாக ரூ.5 லட்சம் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
அபினய், 2002ஆம் ஆண்டு கஸ்தூரி ராஜா இயக்கிய துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். அந்தப் படத்தில் தனுஷ், ஷெரின் ஆகியோருடன் நடித்த அவர், ஜங்க்ஷன் (2002), சிங்காரா சென்னை (2004), பொன் மேகலை (2005) போன்ற படங்களில் நாயகனாகவும், பின்னர் பல்வேறு படங்களில் துணை வேடங்களிலும் நடித்தார். மேலும், மலையாளத் திரையுலகிலும் பணியாற்றினார். நடிகராக மட்டுமின்றி, அபினய் பல்வேறு ஹீரோக்களுக்கு குரல் கொடுத்த டப்பிங் ஆர்டிஸ்டாகவும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply