பிலிப்பைன்ஸை தாக்கவிருக்கும் பங்வோங் புயலால் 14 லட்சம் பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்
பசிபிக் பெருங்கடலில் உருவான கல்மேகி புயல் பிலிப்பைன்ஸ், வியட்நாம் உள்ளிட்ட நாடுகளை தாக்கியது. இதனால் அங்கு பெய்த கனமழையால் ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடின. சில இடங்களில் குடியிருப்பு பகுதியில் வெள்ளம் சூழ்ந்தது. இதனால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி 204 பேர் பலியாகினர். மேலும் பல கோடி ரூபாய் அளவுக்கு பொருட்சேதமும் ஏற்பட்டது. உள்கட்டமைப்பை சரிசெய்யும் பணி பிலிபைன்ஸில் முடுக்கி விடப்பட்டுள்ளது. இதற்காக நட்பு நாடுகளான அமெரிக்கா, ஜப்பான் ஆகியவை உதவ முன் வந்துள்ளன.
தற்போது ‘பங்வோங்’ என்ற புயல் பிலிப்பைன்சின் கிழக்கு கடற்பகுதியை நோக்கி வேகமாக நகர்ந்து வருகிறது. பசிபிக் பெருங்கடலில் உருவான இந்த புயல் அரோரா அல்லது இசபெலா மாகாணத்தில் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 230 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அங்குள்ள 86 துறைமுகங்களில் சுமார் 6 ஆயிரத்து 600 பயணிகள், ஊழியர்கள் சிக்கி கொண்டனர். எனவே மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது.
புயல் கரையைக் கடப்பதற்கு முன்பு 14 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தங்கள் இருப்பிடங்களில் இருந்து வெளியேற்றப்பட்டு அவசரகால முகாம்கள் அல்லது உறவினர்களின் வீடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். சுமார் 3,18,000 பேர் தற்காலிக நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று மற்றும் இன்று ஆகிய இரண்டு தினங்களுக்கு பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. சுமார் 325-க்கும் மேற்பட்ட உள்நாட்டு விமானங்கள் மற்றும் 60-க்கும் மேற்பட்ட சர்வதேச விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதிகளில் மீட்பு பணி மேற்கொள்ள தயார் நிலையில் இருக்குமாறு தேசிய பேரிடர் மீட்பு படையினருக்கு அதிபர் பெர்டினாண்ட் மார்கோஸ் ஜூனியர் உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply