பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் 200 தொகுதிக்கும் மேல் தேசிய ஜனநாயக கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது
பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் ஜனதா தளம் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 190 இடங்களில் முன்னிலை பெற்று வெற்றியை உறுதி செய்திருக்கிறது. இதன் மூலம் பாஜக மற்றும் ஜனதா தளம் இணைந்து பிகாரில் மீண்டும் ஆட்சியமைக்கும் என்பது தெளிவாகிறது.
243 தொகுதிகளைக் கொண்ட பீகார் சட்டப்பேரவைக்கு, 122 தொகுதிகளில் பெரும்பான்மை பெற வேண்டிய நிலையில், ஐக்கிய ஜனதா தளம், பாஜக மற்றும் இதர கட்சிகளின் கூட்டணி இணைந்து 190 தொகுதிகளில் முன்னிலை வகித்து, பீகாரில் மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியைப் பிடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பாஜக மட்டும் 85க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.
பீகாரில் நடந்த பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியாகி வருகின்றன.
வாக்கு எண்ணிக்கைத் தொடங்கியது முதலே தேசிய ஜனநாயகக் கூட்டணி முன்னிலையில் உள்ளது. முற்பகல் 12 மணி நிலவரப்படி தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள ஜனதா தளம் 73 தொகுதிகளிலும், பாஜக 84 தொகுதிகளிலும் இதர கட்சிகள் 31 தொகுதிகளிலும் முன்னிலை பெற்று சுமார் 188 தொகுதிகளில் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகின்றன.
மகாகத்பந்தன் கூட்டணியில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் 28 தொகுதிகளிலும் காங்கிரஸ் 4 தொகுதிகளிலும் இதர கட்சிகள் 5 தொகுதிகளிலும் முன்னிலைப் பெற்று ஒட்டுமொத்தமாக 36 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளன. எனவே, பீகாரில், மீண்டும் பாஜக ஜனதா தளம் கூட்டணி தலைமையிலான ஆட்சியமையப் போகிறது என்பது முன்னிலை நிலவரங்கள் மூலமாகவே அறியப்படுகிறது.

Leave a Reply