டெஃப்லிம்பிக்ஸில் தங்கம் வென்றார் அனுயா பிரசாத்

ஜப்பானில் நடைபெற்று வரும் செவித்திறன் மாற்றுத்திறனாளிகளுக்கான ஒலிம்பிக்(டெஃப்லிம்பிக்ஸ்) போட்டியில் இந்தியாவை சேர்ந்த அனுயா பிரசாத் தங்கம் வென்று அசத்தியுள்ளார்.

ஜப்பானில் நடைபெறும் செவித்திறன் மாற்றுத்திறனாளிகளுக்கான டெஃப்லிம்பிக்ஸ் போட்டியில், துப்பாக்கி சுடுதலில் இந்தியர்கள் அசத்தி வருகின்றனர்.

போட்டியின் 2-ஆம் நாளில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் மகளிர் பிரிவில் அனுயா பிரசாத் 241.1 புள்ளிகளை எட்டி உலக சாதனையுடன் தங்கம் வென்றார். அதிலேயே பிரஞ்சலி பிரசாந்த் துமல் 236.8 புள்ளிகளுடன் வெள்ளியை தனதாக்கினார். ஈரானின் மஹ்லா சமீ வெண்கலப் பதக்கம் பெற்றார்.

கடந்த ஆண்டு நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்ற அனுயாவுக்கு, சர்வதேச அளவில் இது 2-ஆவது தங்கமாகும். முன்னதாக தகுதிச்சுற்றில், பிரஞ்சலி 572 புள்ளிகளை கைப்பற்றி, உலக சாதனையுடன் முதலிடம் பிடித்து இறுதிச்சுற்றுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது. அனுயா அதில் 564 புள்ளிகளுடன் 3-ஆம் இடம் பிடித்தார்.

இதனிடையே, 10 மீட்டர் ஏர் பிஸ்டல் ஆடவர் பிரிவில் இந்தியாவின் அபினவ் தேஷ்வால் 235.2 புள்ளிகளுடன் 2-ஆம் இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றார். தென் கொரியாவின் டே யங் கிம் (238.2) தங்கமும், குரோஷியாவின் போரிஸ் கிராம்னியாக் (215.3) வெண்கலமும் கைப்பற்றினர்.

கடந்த 2022 டெஃப்லிம்பிக்ஸில் தங்கம் வென்றவரான அபினவ் தேஷ்வால், இந்த முறை தகுதிச்சுற்றில் 576 புள்ளிகள் பெற்று உலக சாதனையுடன் முதலிடம் பிடித்து இறுதிக்கு முன்னேறினார். களத்திலிருந்த மற்றொரு இந்தியரான ருதர் வினோத் குமார் 549 புள்ளிகளுடன் 12-ஆம் இடம் பிடித்து தகுதிச்சுற்றுடன் வெளியேறினார்.

இந்தப் போட்டியில் இத்துடன், துப்பாக்கி சுடுதலில் மட்டும் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 2 தங்கம், 4 வெள்ளி, 1 வெண்கலம் என 7-ஐ எட்டியிருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published.