இந்திய வாக்காளர் பட்டியலில் இருந்து சட்டவிரோத குடியேறிகள், போலி வாக்காளர்கள் மற்றும் இறந்தவர்களை நீக்கும் வகையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பீகாரைத் தொடர்ந்து, அடுத்த ஆண்டு (2026) சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்காளம் உள்ளிட்ட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
தேர்தல் ஆணையத்தின் இந்த தீவிர திருத்த நடவடிக்கைக்கு நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன. மேற்கு வங்காளத்திலும் எஸ்.ஐ.ஆர் பணிகளுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இந்நிலையில், மேற்குவங்கத்தில் SIR பணிகளில் ஈடுபட்டு வந்த சாந்தி முனி எக்கா என்ற பூத் லெவல் அலுவலர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அம்மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தற்கொலை செய்துகொண்ட சாந்தி முனி எக்காவுக்கு இரங்கல் தெரிவித்து மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி பதிவிட்டுள்ளார்.
அவரது பதிவில், “இன்று மீண்டும், ஜல்பைகுரியின் மாலில் ஒரு பூத் லெவல் அதிகாரியை இழந்தோம். சாந்தி முனி எக்கா, ஒரு பழங்குடியின பெண், ஒரு அங்கன்வாடி ஊழியர், நடந்து வரும் SIR பணியின் தாங்க முடியாத அழுத்தத்தில் தனது உயிரை மாய்த்துக் கொண்டார்.
SIR தொடங்கியதிலிருந்து ஏற்கனவே 28 பேர் தங்கள் உயிரை இழந்துள்ளனர். சிலர் பயம் மற்றும் நிச்சயமற்ற தன்மை காரணமாகவும், மற்றவர்கள் மன அழுத்தம் மற்றும் அதிக வேலைச்சுமை காரணமாகவும் உயிரை இழந்துள்ளனர்.
இந்திய தேர்தல் ஆணையத்தின் திட்டமிடப்படாத, இடைவிடாத பணிச்சுமையால் இத்தகைய விலைமதிப்பற்ற உயிர்கள் இழக்கப்படுகின்றன. முன்பு 3 ஆண்டுகள் எடுத்த ஒரு செயல்முறை, தங்களது அரசியல் எஜமானர்களை மகிழ்விக்க, தேர்தல்களுக்கு முன்னதாக 2 மாதங்களுக்குள் கட்டாயப்படுத்தப்பட்டு, BLO-க்கள் மீது மனிதாபிமானமற்ற அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.
மனசாட்சியுடன் செயல்பட்டு மேலும் உயிர்கள் இழக்கப்படுவதற்கு முன்பு இந்த திட்டமிடப்படாத SIR பணிகளை உடனடியாக நிறுத்துமாறு தேர்தல் ஆணையத்தை நான் கேட்டுக்கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.
Leave a Reply