ஜி.வி.பிரகாஷுடன் கடந்த 2021-ஆம் ஆண்டு வெளியான ‘பேச்சுலர்’ படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை திவ்ய பாரதி. இவர் தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் பல்வேறு படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், தெலுங்கு திரைப்படமான “GOAT”-ல் நடித்தபோது தான் அனுபவித்த கசப்பான தருணங்களை நடிகை திவ்யபாரதி பகிர்ந்துள்ளார். GOAT படப்பிடிப்பின்போது இயக்குநர் நரேஷ் குப்பிலி தன்னை இழிவுபடுத்தும் வார்த்தையைப் பயன்படுத்தி அழைத்ததாக குற்றம்சாட்டியுள்ளார். மேலும், இந்த விவகாரத்தில் சக நடிகரான சுடிகாலி சுதீர் ஏன் அமைதியாக இருந்தார் என கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக நடிகை திவ்யபாரதி சமூக வலைதள பக்கத்தில், இயக்குநர் நரேஷ் பதிவின் ஸ்கிரீன் ஷாட் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், இயக்குனர் நரேஷ் தன்னை சிலகா என்று அழைக்கிறார். சிலகா என்றால் பறவை என்று பொருள் இருந்தாலும், தெலுங்கில் பெண்களை மரியாதைக்குறைவாக அழைக்க பயன்படுத்தப்படுவதாக சொல்லப்படுகிறது. இது தனக்கு நகைச்சுவையாக தெரியவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
திவ்யபாரதியின் இந்த பதிவுக்கு ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பிய நிலையில், அவர் மீண்டும் ஒரு பதிவை வெளியிட்டார். அதில், “நரேஷின் இந்த செயல் ஒரு ஒற்றை சம்பவம் அல்ல. இந்த இயக்குனர் படப்பிடிப்பு தளத்திலும் இதே பாணியில் தான் நடந்து கொண்டார். மீண்டும் மீண்டும் பெண்களை அவமதித்தார். ஆனாலும், அந்த படத்தில் என்னுடன் சேர்ந்து நடித்த சுடிகாலி சுதீர் அமைதியாக இருப்பதைப் பார்த்து எனக்கு மிகவும் ஏமாற்றம் அளித்தது.

தமிழ் சினிமாவில் ஒரே குழு, நடிகர்கள் மற்றும் குழுவினருடன் நான் பலமுறை மோதல்கள் இல்லாமல் பணியாற்றியுள்ளேன். இந்த ஒரு இயக்குனர் மட்டுமே எல்லை மீறி அவமரியாதையான கருத்துக்களை வெளியிட்டார். அவர் அதை பகிரங்கப்படுத்தத் தேர்ந்தெடுத்தார். அதற்கு பதிலளிக்க எனக்கு முழு உரிமையும் உள்ளது என்றார். இந்நிலையில், திவ்யபாரதியின் இந்த குற்றச்சாட்டுக்கு இயக்குனர் நரேஷ் தரப்பில் இருந்து தற்போது வரை எந்த விளக்கமும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply