அயர்லாந்து அணிக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் போட்டியில் சதம் அடித்ததன் மூலம் பல சாதனைகளை படைத்துள்ளார் வங்கதேச வீரர் முஷ்பிகுர் ரஹீம்.

அயர்லாந்து கிரிக்கெட் அணி டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடுவதற்காக வங்கதேசத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது.
இதில் முதல் டெஸ்ட் போட்டியில் வங்கதேசம் அணி வெற்றி பெற்று தொடரில் முன்னிலையில் உள்ளது. இதனையடுத்து இரு அணிகளுக்கு இடையேயான 2-ஆவது டெஸ்ட் போட்டி இன்று (நவ.20) தொடங்கியது. இதில் டாஸ் வென்ற வங்கதேசம் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
இந்த போட்டியில் விளையாடியதன் மூலம் வங்கதேச அணிக்காக 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய முதல் வங்கதேச வீரர் என்ற சாதனையை முஷ்பிகுர் ரஹீம் படைத்துள்ளார்.
அதன்படி 100-ஆவது போட்டியில் சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் ரஹீம் 11-ஆவது வீரராக இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். இது டெஸ்ட் கிரிக்கெட்டில் ரஹீமின் 13-ஆவது சதமாகும். இதன் மூலம் சக நாட்டு வீரர் மோமினுல் ஹக்கின் சாதனையை சமன் செய்துள்ளார். அதேபோல், டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்த வங்கதேச வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார்.
மேலும், 100-ஆவது டெஸ்ட் போட்டியில் சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் இங்கிலாந்து வீரர் கோலின் கவுட்ரி, ஜாவேத் மியாண்டட் (பாகிஸ்தான்), கார்டன் கிரீனிட்ஜ் (வெஸ்ட் இண்டீஸ்), அலெக் ஸ்டீவர்ட் (இங்கிலாந்து), இன்சமாம் உல் ஹக் (பாகிஸ்தான்), ரிக்கி பாண்டிங் (ஆஸ்திரேலியா), கிரேம் ஸ்மித் (தென் ஆப்பிரிக்கா), ஹாஷிம் அம்லா (தென் ஆப்பிரிக்கா), ஜோ ரூட் (இங்கிலாந்து), டேவிட் வார்னர் (ஆஸ்திரேலியா) மற்றும் முஷ்பிகுர் ரஹீம் (வங்கதேசம்) ஆகியோர் அடுத்தடுத்து இடங்களில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply