சட்டப்பேரவை தேர்தலில் படுதோல்வியடைந்த நிலையில், ஜன் சுராஜ் நிறுவனர் பிரசாந்த் கிஷோர் இன்று பீகாரில் உள்ள பிதிஹர்வா காந்தி ஆசிரமத்தில் ஒரு நாள் மெளன விரதம் இருந்தார்.

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் முன்னிலையில் நிதிஷ் குமார் 10வது முறையாக பிஹார் முதல்வராக இன்று பதவியேற்றார். அவருடன் 26 கேபினட் அமைச்சர்களும் பதவியேற்றனர். இந்த சூழலில், பிரசாந்த் கிஷோர் இன்று பிதிஹர்வா காந்தி ஆசிரமத்தில் மெளன விரதம் இருந்தார்.
பீகார் சட்டப்பேரவை தேர்தலில் ஜன் சுராஜ் கட்சி 238 தொகுதிகளில் போட்டியிட்டு 236 தொகுதிகளில் டெபாசிட்டை இழந்தது. மேலும், அக்கட்சி 3.4 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றது. இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பிரசாந்த் கிஷோர், “கடந்த மூன்று ஆண்டுகளாக நான் உழைத்ததை விட இரண்டு மடங்கு கடினமாக உழைப்பேன். என் முழு பலத்தையும் பயன்படுத்துவேன். பின்வாங்கும் கேள்விக்கே இடமில்லை. பீகாரை மேம்படுத்துவதற்கான எனது உறுதியை நிறைவேற்றும் வரை பின்வாங்க மாட்டேன்.
பீகார் மக்கள் எந்த அடிப்படையில் வாக்களிக்க வேண்டும், ஏன் ஒரு புதிய அமைப்பு வேண்டும் என்பதை நான் அவர்களுக்கு விளக்கத் தவறிவிட்டேன். எனவே, அதற்குப் பிராயச்சித்தமாக, நவம்பர் 20 ஆம் தேதி காந்தி பிதிஹர்வா ஆசிரமத்தில் ஒரு நாள் மவுன விரதம் அனுசரிப்பேன். நாங்கள் தவறுகள் செய்திருக்கலாம், ஆனால் நாங்கள் எந்த குற்றமும் செய்யவில்லை” என்று கூறினார்.
நிதிஷ் குமாரின் பதவியேற்பு விழா பாட்னாவின் காந்தி மைதானத்தில் இன்று நடந்தது. இந்த விழாவில் ஹரியானா முதல்வர் நயாப் சிங் சைனி, அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா, நாகாலாந்து முதல்வர் நெய்பியு ரியோ, ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Leave a Reply