இந்தியாவிற்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் 314 ரன்கள் எடுத்து முன்னிலை பெற்றுள்ளது தென் ஆப்பிரிக்க அணி.

இந்தியா-தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான 2-ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் தொடங்கியது. இதில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்சில் 489 ரன்கள் குவித்த நிலையில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக முத்துசாமி 109 ரன்கள் அடித்தார். இந்திய தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 6.1 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 9 ரன் எடுத்திருந்தபோது, போதிய வெளிச்சமின்மையால் 2-ஆவது நாள் ஆட்டம் முன்கூட்டியே முடிக்கப்பட்டது. ராகுல் 2 ரன்களுடனும், ஜெய்ஸ்வால் 7 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இந்த சூழலில் இன்று(நவ.24) 3-ஆவது நாள் ஆட்டம் நடைபெற்றது.
தொடர்ந்து பேட்டிங் செய்த இந்திய அணி தென் ஆப்பிரிக்க பந்து வீச்சாளர் மார்கோ ஜான்சனின் வேகத்தில் விக்கெட்டுகளை இழந்தது. தடுமாற்றத்துடன் பேட்டிங்கை வெளிப்படுத்திய இந்திய அணி முதல் இன்னிங்சில் 83.5 ஓவர்கள் தாக்குப்பிடித்து 201 ரன்களில் ஆல் அவுட் ஆகி பாலோ ஆன் ஆனது.
இந்தியா தரப்பில் அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் 58 ரன்களும், வாஷிங்டன் சுந்தர் 48 ரன்களும் அடித்தனர். தென் ஆப்பிரிக்கா தரப்பில் மார்கோ ஜான்சன் 6 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார். இருப்பினும் இந்திய அணிக்கு பாலோ ஆன் வழங்காத தென் ஆப்பிரிக்க அணி 288 ரன்கள் முன்னிலை பெற்ற நிலையில் 2-ஆவது இன்னிங்சில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

அதன்படி 2-ஆவது இன்னிங்சை தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரிக்கல்டன் மார்க்ரம் களமிறங்கினர். பும்ரா வீசிய 2-ஆவது இன்னிங்சின் முதல் பந்தை பவுண்டரிக்கு ஓட விட்டு ரிக்கல்டன் அதிரடியாக தொடங்கினார்.
தென் ஆப்பிரிக்க அணி 2-வது இன்னிங்சில் 8 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 26 ரன்கள் அடித்திருந்தபோது போதிய வெளிச்சமின்மையால் 3-ஆவது நாள் ஆட்டம் முன்கூட்டியே முடித்து கொள்ளப்பட்டது. மார்க்ரம் 12 ரன்களுடனும், ரிக்கல்டன் 13 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
தென் ஆப்பிரிக்க அணி இதுவரை 314 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது. இந்த போட்டியில் இன்னும் 2 நாட்கள் எஞ்சியுள்ளதால் தற்சமயம் வெற்றி வாய்ப்பு தென் ஆப்பிரிக்க அணிக்கே அதிகம் இருப்பதாக பார்க்கப்படுகிறது. நாளை 4-ஆவது நாள் ஆட்டம் நடைபெற உள்ளது.

Leave a Reply