இந்தியா-கனடா யுரேனியம் ஒப்பந்தத்திற்கு காங்கிரஸ் அரசு தான் காரணம்: ஜெய்ராம் ரமேஷ் தகவல்

இந்தியா, கனடா இடையே யுரேனியம் விநியோக ஒப்பந்தம் இறுதியாகும் நிலையில் உள்ளதாக கூறப்படும் நிலையில், இதற்கு முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தமே முழுக் காரணம் என்று காங்கிரஸ் பொதுச் செயலர் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.

தென்னாப்பிரிக்காவில் சமீபத்தில் நடைபெற்ற ஜி20 உச்சிமாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி, கனடா பிரதமர் மார்க் கார்னியுடன் இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். பாதுகாப்புத் துறையில் ஒத்துழைப்பை அதிகரிக்கவும், 2030-க்குள் இருதரப்பு வர்த்தகத்தின் மதிப்பை 50 பில்லியன் டாலராக இரட்டிப்பாக்கும் நோக்கில் விரிவான பொருளாதார கூட்டாண்மை ஒப்பந்த பேச்சுவார்த்தையைத் தொடங்கவும் இரு தலைவர்களும் ஒப்புக் கொண்டனர்.

இந்தச் சூழலில், அடுத்த 10 ஆண்டுகளுக்கு இந்தியாவுக்கு கனடா யுரேனியம் விநியோகிப்பதற்கான 2.8 பில்லியன் டாலர் மதிப்பிலான ஒப்பந்தம் இறுதியாகும் நிலையில் உள்ளதாக அந்நாட்டு ஊடகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதைக் குறிப்பிட்டு, காங்கிரஸ் பொதுச் செயலர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘கடந்த 2008-இல் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கின் மதிநுட்பத்தால் மேற்கொள்ளப்பட்ட இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தால்தான், தற்போது இந்தியா-கனடா யுரேனியம் விநியோக ஒப்பந்தம் சாத்தியமாகிறது. இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்துக்கு அப்போது எதிர்க்கட்சியாக இருந்த பாஜக எதிர்ப்பு தெரிவித்தது’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.