ஹாங்காங்கில் பயங்கர தீ விபத்து; 65 பேர் பலி, 70க்கும் மேற்பட்டோர் படுகாயம்

ஹாங்காங் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடங்களில் ஏற்பட்ட தீ விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 65 ஆக அதிகரித்துள்ளது. 70-க்கும் மேற்பட்டோர் பலத்த தீக்காயம் அடைந்த நிலையில், 300 பேரை காணவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹாங்காங்கின் டய் போ பகுதியில் வாங் பக் கோர்ட் என்ற அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் 8 அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன. ஒவ்வொரு அடுக்குமாடி குடியிருப்பும் 31 மாடிகளை கொண்ட கட்டிடங்களாகும். இங்குள்ள 2,000-க்கும் மேற்பட்ட வீடுகளில் சுமார் 5,000 பேர் வசித்து வந்தனர். இங்கு, கடந்த சில மாதங்களாக பராமரிப்பு பணிகள் நடைபெற்று வந்தன.

நேற்று முந்தினம் பிற்பகலில் வாங் பக் கோர்ட் வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டது. மூங்கில் சாரம், தார்பாலின் காரணமாக 8 அடுக்குமாடி குடியிருப்புகளுக்கும் தீ மளமளவென்று பரவியது.

ஒரே நேரத்தில் 8 அடுக்குமாடி குடியிருப்புகளிலும் வானளாவிய உயரத்துக்கு தீப்பற்றி எரிந்தது. சுமார் 800 தீயணைப்பு படை வீரர்கள், 128 தீயணைப்பு லாரிகள் மூலம் தீயை அணைக்கும் பணி தீவிரமாக நடைபெற்றது. 20 மணி நேர போராட்டத்துக்குப் பிறகு தீ அணைக்கப்பட்டது. 1000-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு மற்றும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். 100-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் பயன்படுத்தப்பட்டன.

வாங் பக் கோர்ட் வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் இதுவரை 65 பேர் உயிரிழந்தனர். 8 தீயணைப்பு படை வீரர்கள் உட்பட 70-க்கும் மேற்பட்டோர் பலத்த தீக்காயங்களுடன் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனிடையே, தீ விபத்து நிகழ்ந்த குடியிருப்புகளில் இருந்து இதுவரை 300 பேரை காணவில்லை. அவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த தீ விபத்து குறித்த விசாரணையும் முடுக்கிவிடப்பட்டுள்ளது.

பிரிட்டனின் காலனியாக இருந்த ஹாங்காங் கடந்த 1997 ஜூலை 1-ம் தேதி சீனாவிடம் ஒப்படைக்கப்பட்டது. சீனாவின் கட்டுப்பாட்டின் கீழ் தன்னாட்சி அதிகாரம் பெற்ற பிராந்தியமாக ஹாங்காங் செயல்படுகிறது. இங்கு 263 தீவுகள் உள்ளன.இதில் ஹாங்காங், லந்தாவு ஆகியவை மிகப் பெரிய தீவுகள் ஆகும். நிர்வாக ரீதியாக 18 மாவட்டங்களாக ஹாங்காங் பிரிக்கப்பட்டு இருக்கிறது. இதில் டய் போ மாவட்டமும் ஒன்றாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.