கர்நாடகாவில் முதல்வர் மாற்றம் தொடர்பான சர்ச்சை அதிகரித்துள்ள நிலையில், ‘காங்கிரஸ் உயர் தலைமை அழைத்தால் டெல்லிக்குச் செல்வேன்’ என்று முதல்வர் சித்தராமையா கூறியுள்ளார்.

கர்நாடகாவில் காங்கிரஸ் அரசு பதவியேற்று நவம்பர் 20 அன்று தனது ஐந்தாண்டு பதவிக் காலத்தின் முதல் பாதியை கடந்தது. ஆட்சியின் முதல் இரண்டரை ஆண்டு காலம் சித்தராமையா முதல்வராகவும், அடுத்த இரண்டரை ஆண்டு காலம் டி.கே.சிவகுமார் முதல்வராகவும் இருப்பார்கள் என பேசப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. தற்போது சிவகுமாரை முதல்வராக்க வேண்டும் என அவரின் ஆதரவு எம்எல்ஏக்கள் டெல்லியில் காங்கிரஸ் தலைமைக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.
பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய மல்லிகார்ஜுன கார்கே, “ நான் அனைவரையும் அழைத்து விவாதிப்பேன். ராகுல் காந்தியும் இந்த விவாதத்தில் இருப்பார். மற்ற உறுப்பினர்களும் கலந்து கொள்வார்கள். முதல்வர் மற்றும் துணை முதல்வரும் கலந்து கொள்வார்கள். இவர்கள் அனைவருடனும் கலந்துரையாடிய பிறகு முடிவு எடுக்கப்படும். உயர் தலைமைக்கு ஒரு குழு உள்ளது, நான் தனியாக இல்லை. முழு உயர் தலைமை குழுவும் விவாதித்து ஒரு முடிவை எடுக்கும்” என்று அவர் கூறினார்.
கார்கேவின் கருத்து குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த சித்தராமையா, “உயர்நிலை தலைமை அழைத்தால் நான் டெல்லி செல்வேன்” என்று கூறினார்.
பெங்களூருவில் நடந்த செய்தியாளர் சந்திப்பின் போது முதல்வர் பதவி குறித்த கேள்விகளுக்கு கருத்து தெரிவிக்காமல் சித்தராமையா வழக்கம் போல் தனது பணிகளை தொடர்ந்தார். அப்போது அவர், மாநிலத்தில் அதிக மழையால் பாதிக்கப்பட்ட 14 லட்சம் ஹெக்டேர் பயிர் சேதத்திற்கு ரூ.1,033 கோடி நிவாரணத் தொகையை அறிவித்தார்.
Leave a Reply