Site icon Metro People

20 நாளில் 2,085 வழக்குகளை முடித்து உயர் நீதிமன்ற கிளை சாதனை: மத்திய அரசு ட்விட்டரில் பதிவிட்டு பெருமிதம்

உயர் நீதிமன்ற மதுரை கிளை முதல் அமர்வு 20 வேலை நாட்களில் 2,085 வழக்குகளை விசாரித்து முடித்து சாதனை புரிந்திருக்கும் தகவலை மத்திய அரசு ட்விட்டரில் வெளியிட்டுள்ளது. உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதி ஆர்.மகாதேவன் தலைமையில் 15 நீதிபதிகள் பணிபுரிகின்றனர். நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்ய நாராயண பிரசாத் ஆகியோர் கொண்ட முதல் அமர்வு செப்.5 முதல் பொதுநல வழக்குகள், ரிட் வழக்குகள், ரிட் மேல்முறையீடு மனுக்களை விசாரித்து வருகிறது. இந்த முதல் அமர்வு செப்.5 முதல் 20 வேலை நாட்களில் 2,085 வழக்குகளை விசாரித்து முடித்து புதிய சாதனை படைத்துள்ளது. இத்தகவலை மத்திய சட்டம் மற்றும் நீதித் துறை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

இந்த அமர்வில் 20 நாட்களில் 776 ரிட் மனுக்கள், 147 ரிட் மேல்முறையீடு உட்பட 938 பிரதான வழக்குகள், 1,147 துணை மனுக்கள் விசாரித்து முடிக்கப்பட்டுள்ளன. இந்த வழக்குகள் 6 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் இருந்தன. இதுகுறித்து வழக்கறிஞர் கே.சாமிதுரை கூறும்போது,முதல் அமர்வு அனைத்து வழக்குகளுக்கும் சம வாய்ப்பு வழங்கி விசாரித்து முடித்து வருகிறது. சில வழக்குகள் காரணம் தெரியாமல் பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்து வருகின்றன. அந்த வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்களிடம் விளக்கம் கேட்டு தீர்வு காணப்படுகிறது என்றார். நாடு முழுவதும் ஜூலை மாதம் முடிய 59 லட்சம் வழக்குகள் நிலுவையில் உள்ளன. உயர் நீதிமன்ற மதுரை கிளை, சென்னை உயர் நீதிமன்றத்தில் மட்டும் 5,63,046 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

Exit mobile version