மும்பை: எதிர்மறை விமர்சனங்களை பெற்றாலும் பிரபாஸ் நடித்துள்ள ‘ஆதிபுருஷ்’ படம் உலகம் முழுவதும் ரூ.240 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
ராமாயணக் கதையின் ஒரு பகுதியை மையமாக வைத்து ஓம் ராவத் இயக்கியுள்ள திரைப்படம் ‘ஆதிபுருஷ்’ . இதில் ராமராக பிரபாஸ், ராவணனாக சைப் அலி கான், சீதையாக கீர்த்தி சனோன் நடித்துள்ளனர். 3டி தொழில்நுட்பத்தில் உருவாகியுள்ள இந்தப் படம் இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என ஒரே நேரத்தில் 5 மொழிகளில் கடந்த ஜூன் 16 அன்று திரையரங்குகளில் வெளியானது. எதிர்மறையான விமர்சனங்களைப் பெற்றுவரும் இப்படத்தின் கிராபிக்ஸ்கள் மோசமாக இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
எனினும் இப்படம் வசூல்ரீதியாக சாதனை படைத்து வருகிறது. ’ஆதிபுருஷ்’ திரைப்படம் முதல் நாளில் உலக அளவில் ரூ.140 கோடியை வசூலித்துள்ளதாக நேற்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இரண்டாவது நாளான நேற்று (ஜூன் 17) மட்டும் ரூ.100 கோடியை இப்படம் வசூலித்து, மொத்தம் ரூ.240 கோடிக்கு மேல் குவித்துள்ளது. இந்தியில் ரூ.70 கோடியும், பிராந்திய மொழிகளில் ரூ.135 கோடியும் இப்படம் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.