கிராமப்புற சுகாதார சேவையை மேம்படுத்த புதிதாக 2,400 செவிலியர்கள், 2,448 சுகாதார ஆய்வாளர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று பேரவையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
இதுதொடர்பாக பேரவையில் அவர் வெளியிட்ட அறிவிப்பு:
கிராமப்புற சுகாதார சேவையைமேம்படுத்தவும், நோய்த் தடுப்புநடவடிக்கைகளை வலுப்படுத்தவும் புதிதாக 2,400 செவிலியர்கள், 2,448 சுகாதார ஆய்வாளர்கள் நியமிக்கப்படுவார்கள்.
கரோனா தொற்றை கண்டறியும் வகையில், தேவைப்படும் ஆய்வகங்களுக்கு புதிதாக 17 ஆர்டி-பிசிஆர் பரிசோதனை கருவிகள் ரூ.5.10 கோடியில் வழங்கப்படும்.
தமிழகத்தில் முதல்முறையாக, சென்னை ராஜீவ் காந்தி அரசு பொதுமருத்துவமனையில் அரியவகை ரத்த சிவப்பணுக்கள் உறைநிலை சேமிப்பு பிரிவு ரூ.3.75 கோடியில் ஏற்படுத்தப்படும்.
சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் பிரத்யேக ரத்தம், எலும்பு மஜ்ஜை மாற்று அலகு சிகிச்சை மையம் ரூ.2.56 கோடியில் அமைக்கப்படும். சென்னை டிஎம்எஸ் வளாக ஆய்வகத்தில் ரூ.4 கோடியில் மரபணு பகுப்பாய்வு கூடம் நிறுவப்படும்.
அனைத்து மாவட்டங்களிலும் மக்கள் நலவாழ்வு மையங்களில் பொதுமக்கள், குழந்தைகள், கர்ப்பிணிகளுக்கு ரூ.1.19 கோடி செலவில் யோகா பயிற்சி அளிக்கப்படும்.
பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெய் மறுபயன்பாட்டை தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன், அதில் இருந்து பயோடீசல் தயாரிக்கப்படும்.
முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டம் 2022 ஜனவரிமுதல் மேலும் 5 ஆண்டுகளுக்குதொடர்ந்து நடைமுறைப்படுத்தப்படும். அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் விபத்து, காயப் பதிவேடு ரூ.1.56கோடியில் ஏற்படுத்தப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அமைச்சருக்கு பாராட்டு
மொடக்குறிச்சி பாஜக உறுப்பினர் டாக்டர் சரஸ்வதி பேசும்போது, ‘‘மனதில் மாசு இல்லாமல் பணியாற்ற வேண்டிய துறை சுகாதாரத் துறை. அந்த சேவையை அமைச்சர் மா.சு. போல யாரும் செய்ய முடியாது’’ என்று பாராட்டினார்.