Site icon Metro People

காவிரியில் 25,000 கனஅடி நீர் திறக்கப்பட வேண்டும் – ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: காவிரியில் 5,000 கனஅடி நீர் திறப்பது போதுமானதல்ல என்றும் பற்றாக்குறையை போக்க 25,000 கனஅடி வீதம் திறக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தின் காவிரி பாசனப் பகுதிகளில் கருகும் நிலையில் உள்ள குறுவை நெற்பயிர்களைக் காக்க உடனடியாக தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று அனைத்துத் தரப்பிலிருந்தும் அழுத்தங்கள் அதிகரித்ததைத் தொடர்ந்து கிருஷ்ணராஜசாகர், கபினி ஆகிய அணைகளில் இருந்து காவிரியில் வினாடிக்கு 5000 கனஅடி தண்ணீரை கர்நாடக அரசு திறந்து விட்டிருக்கிறது. காவிரி படுகையின் தண்ணீர் தேவையுடன் ஒப்பிடும் போது இது யானைப்பசிக்கு சோளப்பொறி போன்றதாகும். இது போதுமானது அல்ல.

கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் முழுமையாக தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு வந்து சேராது. தமிழக எல்லைக்கு வினாடிக்கு 4000 கன அடி தண்ணீர் வருவதாக வைத்துக் கொண்டால், மூன்று நாட்களுக்கு ஒரு டி.எம்.சி தண்ணீர் மட்டுமே கிடைக்கும். மேட்டூர் அணையில் உள்ள தண்ணீர் ஆகஸ்ட் 10ம் நாள் வரை பாசனத்திற்கு திறக்க போதுமானது என மதிப்பிடப்பட்டுள்ள நிலையில், கர்நாடகத்திலிருந்து இதே அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டால், கூடுதலாக 6 நாட்களுக்கு திறப்பதற்கான தண்ணீர் (6 டி.எம்.சி) மட்டுமே கிடைக்கும். ஆகஸ்ட் 16ம் நாளுக்குப் பிறகு காவிரி படுகையில் குறுவைப் பயிர்கள் மீண்டும் வாடும் நிலை தான் ஏற்படும்.

உச்சநீதிமன்றம், காவிரி நடுவர் மன்றம் ஆகியவற்றின் தீர்ப்பின்படி தமிழகத்துக்கு கர்நாடகா இன்று வரை 32.36 டி.எம்.சி தண்ணீர் திறந்து விட்டிருக்க வேண்டும். ஆனால், 4 டி.எம்.சி மட்டுமே வழங்கியுள்ளது. இன்று வரை 28.36 டி.எம்.சி தண்ணீரை கர்நாடகா வழங்க வேண்டியுள்ளது. ஜூலை மாதத்தின் மீதமுள்ள 8 நாட்களுக்கு 8.06 டி.எம்.சி தண்ணீர் வழங்க வேண்டும். ஒட்டுமொத்தமாக ஜூலை 31-ஆம் நாள் வரை வழங்க வேண்டிய தண்ணீரை கொடுப்பதுக்கு, அடுத்த 9 நாட்களுக்கு ஒரு நாளைக்கு 4.04 டி.எம்.சி, அதாவது வினாடிக்கு 48,560 கன அடி வீதம் கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட வேண்டும். ஆனால், அதில் பத்தில் ஒரு பங்குக்கும் குறைவாக திறந்து விடுவது எந்த வகையில் நியாயம்?

ஆகஸ்ட் மாதத்தில் தமிழகத்துக்கு காவிரியில் 45.95 டி.எம்.சி தண்ணீர் வழங்க வேண்டும். இன்று வரை தமிழகத்துக்கு வழங்க வேண்டிய தண்ணீர் நிலுவையை ஆகஸ்ட் 31ம் நாள் வரை ஈடு செய்வதாக வைத்துக் கொண்டாலும், இன்று முதல் ஆகஸ்ட் 31ம் நாள் வரை நாள்தோறும் 2.11 டி.எம்.சி, அதாவது வினாடிக்கு 25,344 கன அடி தண்ணீரை திறந்து விட வேண்டும். அவ்வாறு தண்ணீர் திறந்து விட்டால் மட்டும் தான் காவிரி பாசன மாவட்டங்களில் குறுவை நெற்பயிர்களை பாதுகாக்க முடியும்.

கர்நாடகத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்படுள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர், ஹாரங்கி, ஹேமாவதி ஆகிய அணைகளில் இன்று காலை நிலவரப்படி, 58 டி.எம்.சி தண்ணீர் உள்ளது. நான்கு அணைகளுக்கும் வினாடிக்கு 35,000 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. கபினி, ஹாரங்கி அணைகளில் 80%க்கும் கூடுதலாக தண்ணீர் இருப்பதால் அடுத்த சில நாட்களில் அவை நிரம்பக் கூடும். இத்தகைய சூழலில் தமிழகத்துக்கு தேவையான தண்ணீரை வழங்குவதில் கர்நாடக அரசுக்கு எந்த சிக்கலும் இல்லை.

கர்நாடகத்தின் குடிநீர் தேவை போக மீதமுள்ள தண்ணீரை தமிழகத்துக்கு வழங்குவதாக கர்நாடக நீர்ப்பாசனத் துறை அமைச்சர் சிவக்குமார் கூறுகிறார். கர்நாடக அணைகளுக்கு வரும் 35,000 கனஅடி தண்ணீரில் வெறும் 14 விழுக்காட்டை மட்டும் தமிழக பாசனத்திற்கு திறந்து விட்டு, 86 விழுக்காட்டை கர்நாடகத்தின் குடிநீருக்காக சேமிப்பது எந்த வகையில் நியாயம் என்று தெரியவில்லை. இது பெரும் அநீதி.

தமிழகத்தின் காவிரி பாசன மாவட்டங்களில் கருகும் நிலையில் உள்ள குறுவை நெற்பயிர்களைக் காப்பாற்ற வேண்டியது கட்டாயம் ஆகும். அதற்காக காவிரியில் வினாடிக்கு 25,000 கனஅடி வீதம் கர்நாடகம் தண்ணீர் திறந்து விட வேண்டும். அவ்வாறு கர்நாடகம் நீர் திறந்து விடுவதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும். அதற்கு தேவையான அழுத்தத்தை தமிழக அரசு அளிக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Exit mobile version