Site icon Metro People

கருணாநிதியின் 3-ம் ஆண்டு நினைவுநாள் இன்று அனுசரிப்பு: நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் அஞ்சலி

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 3-ம் ஆண்டு நினைவுதினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி அவரது நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள், திமுக நிர்வாகிகள் அஞ்சலி செலுத்துகின்றனர்.

50 ஆண்டுகள் திமுக தலைவராகவும், 19 ஆண்டுகள் தமிழக முதல்வராகவும், 13 முறை சட்டப்பேரவை உறுப்பினராகவும் இருந்த கருணாநிதி, கடந்த 2018 ஆகஸ்ட் 7-ம் தேதி காலமானார். அவரது 3-வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. தமிழகத்தில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு திமுக ஆட்சிக்கு வந்துள்ள நிலையில், கருணாநிதி நினைவு தின நிகழ்ச்சியை மிகப்பெரிய அளவில் நடத்த திமுக நிர்வாகிகள் திட்டமிட்டிருந்தனர்.

ஆனால், கரோனா 3-வது அலைபரவல் எச்சரிக்கை காரணமாகவும், கரோனா தொற்று மெல்ல மெல்ல அதிகரித்து வருவதாலும் பெரிய அளவிலான நிகழ்ச்சிகளைத் தவிர்த்து அவரவர் வீடுகள் முன்புகருணாநிதி படம் வைத்து அஞ்சலி செலுத்துமாறு நிர்வாகிகள், தொண்டர்களுக்கு கட்சித் தலைவரும், முதல்வருமான ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்நிலையில், கருணாநிதி நினைவு தினமான இன்று காலை சென்னை மெரினா கடற்கரை அண்ணா நினைவிட வளாகத்தில் அமைந்துள்ள கருணாநிதி நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின், துரைமுருகன், கே.என்.நேரு உள்ளிட்டஅமைச்சர்கள், திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, மகளிரணிச் செயலாளர் கனிமொழி உள்ளிட்ட நிர்வாகிகள் அஞ்சலி செலுத்துகின்றனர்.

கருணாநிதியின் கோபாலபுரம்இல்லம், ஆழ்வார்பேட்டை இல்லம்ஆகிய இடங்களிலும் கருணாநிதி படத்துக்கு முதல்வர் மற்றும் அமைச்சர்கள் அஞ்சலி செலுத்த உள்ளதாக கூறப்படுகிறது.

Exit mobile version