Site icon Metro People

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு கனமழை தொடரும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்துக்கு கனமழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று நள்ளிரவு முதலே பரவலாக மழை பெய்து வருகிறது. பல நாட்களாக கோடை வெயிலின் தாக்கத்தால் அவதிப்பட்டு வந்த சென்னை நகர மக்கள் திடீர் மழையால் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இந்நிலையில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்துக்கு கனமழை தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அசானி புயலால் சென்னையில் கோடை மழை: தென்கிழக்கு வங்கக் கடலில் புதிய புயல் உருவாகியுள்ளது. அசானி என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் புயலால் ஆந்திரா, ஒடிசா, மேற்குவங்கத்தில் பலத்த காற்றுடன் கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.

மேலும், அசானி புயலால் தமிழகத்திலும் 15 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். குறிப்பாக டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், நேற்று நள்ளிரவு முதலே சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இன்று அதிகாலையில் சாரல் மழையாக இருந்த நிலையில், காலை 9 மணி தொடங்கி அண்ணாநகர், வியாசர்பாடி, சைதாப்பேட்டை, ஆவடி, சேத்துப்பட்டு, அனகாபுத்தூர், மேடவாக்கம், ஈக்காட்டுதாங்கல், புரசைவாக்கம், எழும்பூர் உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்தது.

சென்னை தவிர்த்து வேலூர், சேலம்,திருச்சி, விழுப்புரம், திருவாரூர் உட்பட தமிழகத்தின் பிற மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது.

10 விமானங்கள் ரத்து: கனமழை காரணமாக சென்னைக்கு வர வேண்டிய 10 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மும்பை, ஹைதராபாத், ஜெய்ப்பூர், விசாகப்பட்டினத்திலிருந்து வர வேண்டிய விமானங்கள் தான் ராத்தாகியுள்ளன. ஆந்திராவில், அசானி புயலால் இன்று மிக கனமழையும், நாளை அதி கனமழையும் பெய்யும் என்பதால் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

Exit mobile version