சென்னை: தமிழகம் முழுவதும் பெய்து வரும் பரவலான கோடை மழை காரணமாக, தினசரி மின்நுகர்வு 3 ,500 மெகாவாட் அளவுக்கு குறைந்துள்ளது.
தமிழகத்தின் தினசரி மின்நுகர்வு 16 ஆயிரம் மெகாவாட் என்ற அளவில் உள்ளது. இது குளிர்காலத்தில் 12 ஆயிரம் மெகாவாட் என்ற அளவுக்கு குறைந்தும், கோடைக்காலத்தில் 18 ஆயிரம் மெகாவாட் அளவுக்கு அதிகரித்தும் காணப்படும். கடந்த ஆண்டு மே 2-ம் தேதியன்று தினசரி மின் தேவை 20,830 மெகாவாட்டாக அதிகரித்தது. இதுவே இதுவரை உச்ச அளவாக இருந்து வருகிறது.
கோடைக் காலம் தொடங்கி உள்ளதால், வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால், வீடுகளில் ஏசி, மின்விசிறி, ஏர்கூலர் உள்ளிட்ட மின்சாதனங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது. இதனால், தினசரி மின்தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், தினசரி மின் தேவை மிக அதிகபட்சமாக கடந்த மாதம் 28-ம் தேதியன்று 19 ஆயிரம் மெகாவாட்டை எட்டியது. இதுவே, இந்த ஆண்டில் இதுவரை அதிகபட்ச அளவாகும். மின்தேவை அதிகரிப்புக்கு ஏற்ப மின்னுற்பத்தியும், மின்கொள்முதலும் இருந்ததால், மின்பற்றாக்குறை ஏற்படவில்லை.
இந்நிலையில், தமிழகம் முழுவதும் பரவலாக கோடை மழை பெய்து வருகிறது. இதனால், தினசரி மின் தேவை 3,500 மெகாவாட் குறைந்து 15,500 மெகாவாட் என்ற அளவில் உள்ளது. இதற்கிடையே, வரும் மே மற்றும் ஜுன் மாதங்களில் தினசரி மின் தேவை 22 ஆயிரம் மெகாவாட் அளவுக்கு அதிகரிக்கும் என மின்வாரியம் மதிப்பீடு செய்துள்ளது.