புதுச்சேரி: புதுச்சேரி சட்டப்பேரவையை காகிதமில்லா சட்டப் பேரவையாக அறிவித்து துவக்கவிழாவுக்கு மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள்துறை அமைச்சரை அழைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி சட்டப்பேரவையை காகிதம் இல்லா சட்டப் பேரவையாக மாற்றும் விதமாக நேவா (NeVA) திட்டத்தின் கீழ் மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சகத்தின் நிதி அளிப்புடன் பணிகள் நடைபெற்று வருகிறது. நடந்து முடிந்த சட்டப் பேரவை கூட்டத்தொடரில் இத்திட்டத்தின் சில பகுதிகள் மட்டுமே சோதனை முறையில் அமல்படுத்தப்பட்டன. எம்.எல்.ஏக்கள் இருக்கையில் கைக்கணினி பொருத்தப்பட்டு அலுவல் பட்டியல் கேள்வி பதில், ஆளுநர் உரை, மற்றும் முதலமைச்சரின் வரவு செலவு திட்ட உரை ஆகியவை பதிவேற்றம் செய்யப்பட்டு சட்டப்பேரவை உறுப்பினர்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது.
இதன்தொடர்ச்சியாக கேள்வி பதில்கள் மற்றும் பிற செயல்பாடுகளை முன்னெடுப்பது குறித்து சட்டப்பேரவை தலைவர் செல்வம் தலைமையில் எம்.எல்.ஏக்கள், தகவல் தொழில்நுட்பத்துறை செயலர் ஆகியோர் அடங்கிய மன்றக் குழு கூட்டம் இன்று (ஏப்.10) சட்டப்பேரவை தலைவர் அலுவலகத்தில் நடைபெற்றது.இந்தக் கூட்டத்தில் முந்தைய சட்டப்பேரவை நிகழ்வுகள் மற்றும் கேள்வி பதில்கள் ஆகியவற்றை பதிவேற்றம் செய்தல் குறித்தும்,எம்.எல்.ஏக்கள் மற்றும் அதிகாரிகளுக்கு பயிற்சி அளிப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது.
இப்பணிகளை விரைந்து முடித்து புதுச்சேரி சட்டப்பேரவையை காகிதம் இல்லா சட்டப்பேரவையாக அறிவித்து அதன் துவக்க விழாவை மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சரை அழைத்து நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது. சட்டப்பேரவை தலைவர் செல்வம், அனைத்து தரப்பு மக்களும் சட்டப்பேரவை நிகழ்வுகளை தெரிந்து கொள்ளும் வகையில் முந்தைய சட்டப்பேரவை கூட்டத் தொடர்களின் நிகழ்வுகள் குறித்து ஆவணங்களையும் எளிமையான முறையில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இந்தக் கூட்டத்தில் எம்.எல்.ஏக்கள் கே.எஸ்.பி ரமேஷ், அங்காளன் , செந்தில்குமார், அசோக்பாபு, தகவல் தொழில்நுட்பத்துறை செயலர் முத்தம்மா, சட்டப்பேரவை செயலாளர் தயாளன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.