Site icon Metro People

புதிய வாகனங்களுக்கு 5 ஆண்டுகள் காப்பீடு கட்டாயம் உத்தரவு நிறுத்தி வைப்பு

செப்டம்பர் 1 ம் தேதி முதல் புதிய வாகனங்களுக்கு 5 ஆண்டு பம்பர் டூ பம்பர் காப்பீடு கட்டாயம் என்ற உத்தரவை தற்காலிகமாக நிறுத்தி வைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சாலை விபத்து மரணம் தொடர்பான வழக்கு ஒன்றை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வைத்யநாதன்,
வரும் செப்டம்பர் 1ம் தேதி முதல் விற்கப்படும் அனைத்து புதிய வாகனங்களுக்கும் பம்பர் டூ பம்பர் என்ற அடிப்படையில் வாகன உரிமையாளர், ஓட்டுனர், பயணி என அனைவரையும் உள்ளடக்கும் வகையில் வகையில், ஐந்து ஆண்டுகளுக்கு காப்பீடு செய்வதை கட்டாயமாக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். உயர்நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து போக்குவரத்து துறை சார்பிலும் அதற்கான சுற்றறிக்கை வெளியிடப்பட்டது..

இந்நிலையில், பொதுக் காப்பீட்டு மன்றம் (GIC) சார்பில் நீதிபதி வைத்தியநாதன் முன்பு நேற்று மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது அந்த மனுவில், உயர்நீதிமன்றத்தின் உத்தரவை செயல்படுத்த காப்பீட்டு நிறுவனங்கள் தயாராகி வரும் அதே நேரத்தில், இந்திய காப்பீடு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் (IRDAI) விநியோகஸ்தர்களாக மட்டுமே காப்பீடு நிறுவனம் செயல்படுவதால், ஆணையத்தின் ஒப்புதல் இல்லாமல் நிறுவனங்களால் சேவைகளில் எந்த மாற்றமும் செய்ய இயலாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே ஆணையத்தின் ஒப்புதல் பெற்று, உயர்நீதிமன்ற உத்தரவுக்கு ஏற்ப மென்பொருளில் உரிய மாற்றம் செய்ய 90 நாட்கள் அவகாசம் வேண்டுமென கேட்கப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி,பொதுக் காப்பீட்டு மன்றத்தின் கோரிக்கையை ஏற்று தனது முந்தைய உத்தரவை தற்காலிகமாக நிறுத்தி வைத்து உத்தரவிட்டார். தொடர்ந்து வழக்கு விசாரணை வரும் 13-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

Exit mobile version