‘96’ இரண்டாம் பாகம் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இப்படத்தை வேல்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.
‘மெய்யழகன்’ படத்தின் விளம்பர நிகழ்வில் ‘96’ இரண்டாம் பாகம் எழுதி வருவதை உறுதிப்படுத்தினார் இயக்குநர் பிரேம்குமார். தற்போது அக்கதையை முழுமையாக எழுதி முடித்து, முதற்கட்டப் பணிகளையும் தொடங்கி இருக்கிறார். இப்படத்தினை வேல்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.
சமீபத்திய விழா ஒன்றில் பிரேம்குமார், “‘96’ 2-ம் பாகத்துக்கான கதையை எழுதி முடித்துவிட்டேன். முதல் பாகத்தில் உள்ள நடிகர்கள் அனைவருமே இதிலும் நடிக்கவுள்ளார்கள். அதில் எந்தவொரு மாற்றமும் இருக்காது” என்று தெரிவித்துள்ளார்.
2018-ம் ஆண்டு பிரேம்குமார் இயக்கத்தில் வெளியான படம் ‘96’. விஜய் சேதுபதி, த்ரிஷா, கெளரி கிஷன், தேவதர்ஷினி, பக்ஸ் பெருமாள், ஆடுகளம் முருகதாஸ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். பள்ளிக் காலத்து காதலில் தொடங்கி ரீயூனியனை மையப்படுத்தி வெளியான இந்தப் படம் இளைஞர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பைப் பெற்றது.