பூம்…பூம் பும்ராவின் அற்புதமான ரிவர்ஸ் ஸ்விங் பந்துவீச்சு, உமேஷ், ஜடேஜா, தாக்கூரின் பங்களிப்பு ஆகியவற்றால் ஓவல் மைதானத்தில் நடந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 157 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
இந்திய அணி கடைசியாக கடந்த 1971-ம் ஆண்டு அஜித் வடேகர் தலைமையில் சென்று ஓவல் மைதானத்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றதுதான் கடைசியாகும். ஏறக்குறைய 50 ஆண்டுகளுக்குப்பின் இதே ஓவல் மைதானத்தில் இந்திய அணி வரலாற்று வெற்றியை பதிவு செய்துள்ளது.
அதுமட்டுமல்லாமல் கடந்த 1985-ம் ஆண்டுக்குப்பின் இங்கிலாந்து மண்ணில் அந்நாட்டு அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 2-1 என்று இந்திய அணி முன்னிலை வகிப்பது இதுதான் முதல் முறையாகும். தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
ஆட்டநாயகன் விருது முதல்முறையாக வெளிநாட்டில் சதம் அடித்தும், இந்திய அணியின் ஸ்கோர் உயர்வுக்கு காரணமாக அமைந்த ரோஹித் சர்மாவுக்கு வழங்கப்பட்டது. உண்மையில் ஆட்டநாயகன் விருதுக்கு ஷர்துல் தாக்கூரும் தகுதியானவர்தான், இரு இன்னிங்ஸிலும் அற்புதமான அரைசதம், 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றிய அவருக்கும் வழங்க வேண்டும்.
368 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் கடைசி நாள் ஆட்டத்தை தொடங்கிய இங்கிலாந்து அணி 92.2 ஓவர்களில் 210 ரன்களுக்கு ஆட்டமிழந்து 157 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
மூத்த பந்துவீச்சாளர்கள் இசாந்த் சர்மா, முகமது ஷமி, ரவிச்சந்திர அஸ்வின் இல்லாமல் இந்திய அணி பெற்ற இந்த வெற்றி முத்தாய்ப்பானதுதான்.
ஓவல் ஆடுகளம் கடைசி நாளில் முழுவதும் பேட்ஸ்மேன்களுக்குதான் சாதகமாக இருக்கும் என தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையிலும் இந்தியப் பந்துவீச்சாளர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை வீழ்த்தி இங்கிலாந்து அணிக்கு நெருக்கடி ஏற்படுத்தி வீழ்த்தியது பாராட்டுக்குரியது.
அதிலும் பூம்…பூம் பும்ராவின் பந்துவீச்சு அற்புதமானது. இந்த சம்மர்சீசனில் சிறந்தது பும்ராவின் பந்துவீச்சு என்று ஷேர் வார்ன் புகழ்ந்துள்ளார். 22 ஓவர்கள் வீசிய பும்ரா 27 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
அதிலும் பந்து தேய்ந்து ரிவர்ஸ் ஸ்விங் ஆகத்தொடங்கியபின், பேர்ஸ்டோ, போப் இருவரின் விக்கெட்டையும் யார்கரில் வீழ்த்தியது ஆகச்சிறந்த பந்துவீச்சு. இந்த இரு விக்கெட்டுகள்தான் ஆட்டத்துக்கு திருப்புமுனையாக அமைந்தது. அதிலும் பும்ரா வீசிய பந்து காற்றில் ரிவர்ஸ் ஸ்விங் ஆகி போப் விக்கெட்டை சாய்த்ததை பார்த்திருந்தால் வக்கார் யூனுஸ் பெருமை கொண்டிருப்பார்.
போப் விக்கெட்டை பும்ரா வீழ்த்தி டெஸ்ட்போட்டியில் அதி விரைவாக 100 விக்கெட்டுகளை எட்டிய இந்திய வீரர் எனும் பெருமையைப் பெற்றார்.
ஜடேஜாவுக்கு தொடர்ந்து 4 டெஸ்ட் போட்டிகளில் வாய்ப்பு அளித்து அஸ்வினை பெஞ்சில் அமரவைத்தது பெரும் சர்ச்சையாகி வந்தது. ஆனால் ஜடேஜா நேற்று முக்கியமான தருணத்தில் ஹமீது, மொயின் அலி இரு முக்கிய பேட்ஸ்மேன்களை வெளிேயற்றி தனது இருப்பை உறுதி செய்துள்ளார். இனிமேல் கடைசி டெஸ்டிலாவது அஸ்வினுக்கு வாய்ப்பு கிடைக்குமா என்பது சந்தேகம்தான்.
ஷர்துல் தாக்கூர் 8 ஓவர்கள் வீசி 22 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இரு விக்கெட்டுகளுமே வெற்றிக்கு முக்கியமானவே, நல்ல பாட்னர்ஷப் அமைத்திருந்த தொடக்க ஜோடியில் பர்ன்ஸ் விக்கெட்டையும், கேப்டன் ரூட்டையும் கழற்றியது தாக்கூர்தான்.
புதிய பந்து எடுக்கப்பட்டவுடன் இங்கிலாந்து அணியின் கடைசி வரிசை பேட்ஸ்மேன்களை நான் பார்த்துக் கொள்கிறேன் என்ற ரீதியில் 3 விக்கெட்டுகளை உமேஷ் யாதவ் சாய்த்தார்.
ஒட்டுமொத்தத்தில் பந்துவீச்சுக்கு சாதகமில்லாத ஆடுகளத்திலும் எங்களால் சாதிக்கமுடியும் என்ற இந்திய அணியின் நம்பி்க்கைக்கு கிடைத்த வெற்றியாகும்.
இங்கிலாந்து அணியைப் பொறுத்தவரை தொடக்க ஜோடி ரோரி பர்ன்ஸ், ஹசீப் இருவரும் நல்ல பாட்னர்ஷிப்் அமைத்துக் கொடுத்து 100 ரன்களில் பிரிந்தனர். பர்ன்ஸ்(50) ரன்களிலும், ஹசீப் ஹமீது(63) ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
மிகவும் எதிர்பார்்க்கப்பட்ட டேவிட் மலான்5 ரன்னில் ரன்அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். 100 ரன்ககளுக்கு எந்தவிக்கெட்டையும் இழக்காமல் இருந்த இங்கிலாந்து அணி அடுத்த 47 ரன்களுக்குள் 6 விக்கெட்டுகளை இழந்தது.
குறிப்பாக 141 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்திருந்த இங்கிலாந்து அடுத்த 6 ஓவர்களில் 6 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை மடமடவென இழந்தது. இதுதான் ஆட்டத்தின் திருப்புமுனையாகும்.
ஆட்டத்தின் மதிய உணவு இடைவேளைக்குப்பின் இந்திய அணி டிரைவர் சீ்ட்டில் அமர்ந்து ஆட்டத்தை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது.
ஓலே போப்(2), பேர்ஸ்டோ(0),மொயின்அலி(0) என வரிசையாக வெளியேறியது இங்கிலாந்து அணியின் வெற்றிக்கனவைக் கலைத்தது. நிதானமாக ஆடிய ரூட்டும் 36 ரன்னில் தாக்கூர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
அதன்பின் வோக்ஸ்(18), ஓவர்டன்(10), ஆன்டர்ஸன்(2) ஆகியோர் உமேஷ் யாதவ் பந்துவீச்சில் விரைவாக வெளியேற இங்கிலாந்து அணியின் ஆட்டம் முடிவுக்கு வந்தது. மதிய செஷனக்குப்பின் இந்தியப் பந்துவீச்சைத் தாக்குப்பிடிக்க முடியாமல், இங்கிலாந்து அணி 25.1 ஓவர்களில் 62 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்தது.
சுருக்கமான ஸ்கோர்:
முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 191 ரன்களும், இங்கிலாந்து அணி 290 ரன்களும் சேர்த்தன. 2-வது இன்னிங்ஸில் இந்திய அணி 466 ரன்கள் சேர்த்து 368 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது. இங்கிலாந்து அணி92.2 ஓவர்களில்210 ரன்களுக்கு ஆட்டமிழந்து 157 ரன்களில் தோல்வி அடைந்தது.
இந்தியத் தரப்பில் 2-வது இன்னிங்ஸில் உமேஷ் 3 வி்க்கெட்டுகளையும், பும்ரா, ஜடேஜா, தாக்கூர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.