சீன பொருட்கள் மீதான வரியை 145% ஆக உயர்த்திய ட்ரம்ப்!

அமெரிக்க பொருட்களுக்கான வரியை சீன அதிபர் ஜி ஜின்பிங் 84% உயர்த்தியதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் சீன பொருட்கள் மீதான வரியை 145% ஆக உயர்த்தியுள்ளார்.

பரஸ்பர வரி பட்டியலை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கடந்த 2-ம் தேதி வெளியிட்டார். இதில் சீன பொருட்களுக்கான வரி 34% ஆக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இதற்கு பதிலடியாக அமெரிக்காவின் அனைத்து பொருட்களுக்கும் 34% வரி விதிக்கப்படும் என சீனா அறிவித்தது. இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்கா சீனாவின் கூடுதல் வரி விதிப்புக்கு அபராதமாக 50% வரியை விதித்தது. இதனால் சீனப் பொருட்களின் மீதான வரி 104% ஆனது. இவ்விரு நாடுகளுக்கிடையிலான வரி யுத்தம் தீவிரமடைந்த நிலையில், அமெரிக்க பொருட்களுக்கான வரி 84% ஆக உயர்த்தப்படும் என சீன நிதியமைச்சகம் அறிவித்தது.

இந்தச் சூழலில் உலக நாடுகளின் பொருட்கள் மீதான பரஸ்பர வரி விதிப்பை 90 நாட்களுக்கு நிறுத்தி வைத்தார் ட்ரம்ப். எனினும் இது சீனாவுக்குப் பொருந்தாது என்று தெரிவித்தார். மேலும் சீனாவுக்கான பரஸ்பர வரியை மட்டும் ட்ரம்ப் 125 சதவீதமாக அதிகரித்தார்.

இந்த நிலையில் தற்போது சீன பொருட்கள் மீதான வரி 145% ஆக அதிகரிப்பதாக அமெரிக்காவின் வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்துப் பொருட்களுக்கும் 145 சதவீத வரியும், அமெரிக்கா-மெக்சிகோ-கனடா ஒப்பந்தத்தின் கீழ் வராத அலுமினியம், ஆட்டோமொபைல்கள் மற்றும் கனடா மற்றும் மெக்சிகோவிலிருந்து வரும் பொருட்களுக்கு 25 சதவீத வரியும், மற்ற அனைத்து இறக்குமதி பொருட்களுக்கும் 10 சதவீத வரியும் விதிக்கப்படுவதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *