திமுக தலைமைக்கு ஏற்பட்ட அதிருப்தியின் காரணமாக, 2024 மக்களவைத் தேர்தல் முடிந்த சூட்டோடு கோவையின் முதல் பெண் மேயர் கல்பனா ஆனந்தகுமார் தனது பதவியை ராஜினாமா செய்தார். ஆனால், மேயராக இருந்தபோது தனது வார்டு மக்களை கண்ணும் கருத்துமாக கவனித்துக் கொண்ட கல்பனா, மேயர் பதவி ராஜினாமாவுக்குப் பிறகு வார்டு மக்களை கண்டும் காணாது ஒதுங்கிவிட்டதாக சர்ச்சை வெடித்திருக்கிறது.
கோவை மாநகராட்சியின் 100 வார்டுகளில் 96 வார்டுகளை திமுக-வும் அதன் கூட்டணிக் கட்சிகளும் வசப்படுத்தி வைத்திருக்கின்றன. மேயர் பதவி இம்முறை பெண்களுக்கு ஒதுக்கப்பட்டதால் திமுக முக்கிய நிர்வாகிகள் பலரும் தங்களது மனைவியரை வார்டு கவுன்சிலருக்கு நிறுத்தி ஜெயிக்க வைத்திருந்தார்கள். இதனால், யாருக்கு மேயர் யோகம் அடிக்குமோ என்ற எதிர்பார்ப்பு திமுக-வினர் மத்தியில் இருந்தது.
இந்த நிலையில், 19-வது வார்டு கவுன்சிலரான கல்பனா ஆனந்தகுமாருக்கு அந்த யோகம் அடித்தது. மண்டல தலைவர் பதவியாவது கிடைக்குமா என சந்தேகத்துடன் இருந்தவருக்கு மேயர் பதவியே கிடைத்ததில் மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சர் செந்தில் பாலாஜியின் ‘அனுகிரஹமும்’ உண்டு என்பார்கள்.
மேயர் பதவியை ஏற்றுக் கொண்ட கல்பனா தனது வார்டு மக்களுக்கு எந்தக் குறையும் இல்லாமல் பார்த்துக் கொண்டார். அதேசமயம், பக்கத்து வீட்டில் வசிப்பவர்களுடன் தகராறு, மண்டலத் தலைவருடன் மோதல் என சீக்கிரமே சர்ச்சைகளிலும் சிக்கினார் கல்பனா. துறை அமைச்சரான கே.என்.நேருவிடமே முரண்பட்டவர், திமுக கவுன்சிலர்களையும் மதிக்கவில்லை என தலைமைக்கு புகார்களை தட்டிவிட்டார்கள்.
குறிப்பாக, செந்தில்பாலாஜி சிறை சென்ற பிறகு கல்பனாவின் செயல்பாடுகள் முற்றாக மாறிப் போனதாகச் சொல்கிறார்கள். இதனால் மக்களவைத் தேர்தல் முடிந்த கையோடு கல்பனாவை மேயர் பதவியை ராஜினாமா செய்யச் சொல்லி திமுக தலைமை நெருக்கடி கொடுத்தது. இதனால், மேயர் பதவியை ராஜினாமா செய்தார் கல்பனா.
மேயர் பதவியை ராஜினாமா செய்த பிறகு கல்பனா தனது வார்டு பணிகளை மறந்தே போய்விட்டதாக புகார் வாசிக்கிறார்கள். இதுதொடர்பாக நம்மிடம் பேசிய முன்னாள் கவுன்சிலரும், மணியாரன்பாளையத்தைச் சேர்ந்தவருமான கிருஷ்ணசாமி, “சிறு தொழில் நிறுவனங்கள், பள்ளிகள் 19-வது வார்டில் அதிகம் உள்ளது. இங்கு 60-க்கும் மேற்பட்ட லேஅவுட்களில் சுமார் 4,500-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. வார்டுக்குள் அடிப்படை பிரச்சினைகள் நிறைய உள்ளன.
சாக்கடைப் பிரச்சினை, சாலைகள் சீரமைப்பு, பூங்காக்கள் பராமரிப்பு, தெருவிளக்கு பராமரிப்பு ஆகியவை முக்கிய பிரச்சினைகளாகும். பராமரிப்பு சரியாக இல்லாததால் தண்ணீர் சரிவர வருவதில்லை. பாதாளச் சாக்கடை பணிகளும் முழுமையாக மேற்கொள்ளப்படவில்லை. இத்தனை பிரச்சினைகள் இருந்தாலும் கவுன்சிலரான எக்ஸ் மேயர் கல்பனா வார்டு பக்கமே எட்டிப் பார்ப்பதில்லை. மேயர் பதவியை துறந்த அவர், தனது வார்டு பணிகளை மறந்துவிட்டார். இங்கு அவர்தான் ஆரம்ப சுகாதார நிலையத்தை கொண்டு வந்தார்.
குடிநீர் விநியோக பணிகளை செய்தார். மற்ற எதையும் அவர் செய்யவில்லை. சாலைகள், சாக்கடைகளை புனரமைக்கப்பட வேண்டும். 45 வருடங்களுக்கு முன்பு உருவான இளங்கோ நகரில் இன்னமும் சாக்கடை வசதி செய்து தரப்படவில்லை. திடக்கழிவு மேலாண்மை பணியும் மோசம். ஆங்காங்கே குப்பைகள் தேங்கிக் கிடப்பதால் சுகாதாரச் சீர்கேடு ஏற்படுகிறது. தெருவிளக்கு பராமரிப்பும் மோசமா இருக்கு” என்றார்.
இதற்கெல்லாம் பதில் சொன்ன முன்னாள் மேயரான கல்பனா ஆனந்தகுமார், “இது தவறான குற்றச்சாட்டு. மாதந்தோறும் ரூ.5 லட்சம் வார்டு நிதியை பயன்படுத்தி, திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறேன். தினமும் வார்டு மக்களை நேரில் சந்தித்து குறைகளை கேட்டு சரிசெய்து வருகிறேன். ரூ.30 லட்சம் மதிப்பில் மழைநீர் வடிகால் பணி, ரூ.40 லட்சத்தில் பூங்கா பராமரிப்பு, ரூ.1 கோடி மதிப்பில் பழுதடைந்த 28 சாலைகளை சீரமைக்க நடவடிக்கை, ரூ.38 லட்சத்தில் மாநகராட்சி ஆரம்பப் பள்ளியில் மேம்பாட்டுப் பணி என எனது மக்கள் பணியை தொய்வின்றி செய்து வருகிறேன். பாதாளச் சாக்கடை பணிகளும் எனது வார்டில் நடந்து வருகிறது.
ஒரு பெண் பல தடைகளை தாண்டி, அரசியலுக்கு வந்து மக்கள் பணி செய்தால், அதைப் பொறுத்துக் கொள்ள முடியாதவர்கள் நான் வார்டுக்குச் செல்வதில்லை, மக்களைச் சந்திப்பதில்லை என தவறான குற்றச்சாட்டுகளை தெரிவிக்கின்றனர். தொடர்ந்து எனக்கு தொந்தரவு கொடுத்து வருகின்றனர். இதுகுறித்து கட்சித் தலைமையிடமும் நான் தெரிவித்துள்ளேன். நாங்கள் பரம்பரையாக திமுக-வில் இருப்பவர்கள். மேயர் பதவியிலிருந்து விலகினாலும் மக்கள் பிரதிநிதியாக எனது கடமையை தொய்வின்றி செய்து வருகிறேன்” என்றார். பின்ன எதுக்கு இவர பதவி விலகச் சொன்னாங்க..?