திமுக அமைச்சர்களுக்கு இது போறாத காலம் போலிருக்கிறது. அமலாக்கத்துறை விசாரணை, நீதிமன்றக் கண்டிப்பு என திரும்பிய பக்கமெல்லாம் திமுக அமைச்சர்களுக்கு திகிலாய் இருக்கையில், ’எங்கள் மாவட்டத்துக்குள் வராதே’ என தருமபுரி மாவட்ட பொறுப்பு அமைச்சரான எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்துக்கு எதிராக திமுக-வினரே போர்க்கொடி தூக்கி இருக்கிறார்கள்.
தருமபுரி மாவட்ட பொறுப்பு அமைச்சராக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் திமுக தலைமையால் 2021-ல் அனுப்பிவைக்கப்பட்டார். கருணாநிதி, ஸ்டாலின் இருவருமே, “வேங்கையின் மைந்தன்” எனச் செல்லமாக அழைக்கும் எம்ஆர்கே பொறுப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டதை தருமபுரி மாவட்ட திமுக-வினர் அப்போது சிலாகித்து வரவேற்றனர். பொறுப்பு அமைச்சராகி முதல் முறையாக அவர் தருமபுரிக்கு வந்தபோது கொடுக்கப்பட்ட தடபுடலான வரவேற்பு ஏற்பாடுகளே அதற்கு சாட்சி.
இப்படியாகப்பட்ட நிலையில், மாவட்ட திமுக-வுக்குள் எம்ஆர்கே எடுத்த சில அதிரடி நடவடிக்கைகள் சர்ச்சையைக் கிளப்பின. இதனால், எம்ஆர்கே-யை பொறுப்பு அமைச்சர் பொறுப்பிலிருந்து நீக்க வேண்டும். அவரது நிழலாக வலம் வரும் தனி உதவியாளர் தேவ் ஆனந்தையும் கட்டுப்படுத்தி வைக்க வேண்டும் என தருமபுரி திமுக-வினர் பகிரங்கமாகவே எதிர்ப்பைக் காட்ட ஆரம்பித்தார்கள். இந்த நிலையில், ‘எம்ஆர்கே-யும் தேவ் ஆனந்தும் தருமபுரிக்கு வரக் கூடாது’ என அண்மையில் திமுக-வினர் சமூக ஊடகங்களில் கருத்துகளை பதிவிட்டு வைரலாக்கினர்.
இது அறிவாலயம் வரைக்கும் எதிரொலித்ததால், தருமபுரி கிழக்கு மாவட்ட திமுக விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் எஸ்.கே.துரைசாமி, அயலக அணி மாவட்ட அமைப்பாளர் செந்தில்குமார், மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் சின்னசாமி, மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் மாதையன், மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் கோவிந்தராஜ், சனத்குமார நதி பாதுகாப்புக் குழு தலைவர் கந்தசாமி உள்ளிட்டோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு வரவழைத்து விசாரணை நடத்தியது போலீஸ்.
இந்த விசாரணைக்குப் பிறகு, எம்ஆர்கே-க்கு எதிரான திமுக-வினரின் எதிர்ப்பு கோஷங்கள் சற்றே அடங்கிப் போனாலும், உள்ளுக்குள் இன்னும் அது நீறுபூத்த நெருப்பாகவே இருக்கிறது. இதனிடையே, கடந்த 10-ம் தேதி தருமபுரி மாவட்டத்தில் எம்ஆர்கே பங்கேற்பதாக இருந்த அரசு நிகழ்ச்சி கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது. அமைச்சர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் ஆளும் கட்சியினரே கலகம் செய்யலாம் என்று பரப்பப்பட்ட தகவலே அமைச்சரின் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதுக்கு காரணம் எனச் சொல்லப்பட்டது.
இது தொடர்பாக நம்மிடம் பேசிய எம்ஆர்கே எதிர்ப்பாளர்கள் சிலர், “பொறுப்பு அமைச்சரான இந்த நான்கு ஆண்டுகளில் எம்ஆர்கே மாவட்ட வளர்ச்சிக்கோ கட்சியினர் நன்மைக்காகவோ பெரிதாக எதையும் சாதித்துக் கொடுக்கவில்லை. இரண்டு பிரிவாக இருந்த திமுக கோஷ்டிகளை 5 கோஷ்டிகளாக மாற்றியதுதான் இவர் செய்த சாதனை. செயல்படாதவர்களுக்கும் துதிபாடிகளுக்கும் மட்டுமே கட்சி பொறுப்புகள் வழங்கப்படுகிறது. அடிமட்டத் தொண்டனின் குரலை செவிமடுப்பதே இல்லை. கட்சிக்குள் நடக்கும் குழப்பங்களுக்கு முக்கிய காரணம் அமைச்சரின் தனி உதவியாளர் தேவ் ஆனந்த் தான்.
ஏற்கெனவே மாவட்டத்தில் பலவீனப்பட்டுக் கிடக்கும் கட்சியை வலிமைப்படுத்தாமல், தங்களின் சுய நலத்துக்காக கூறுபோட்டு வைத்துள்ளனர். தருமபுரி திமுக-வின் வளர்ச்சி எம்ஆர்கே-வுக்கு வேண்டுமானால் அவசியமில்லாமல் இருக்கலாம். ஆனால், கண்ணுக்கு முன்னால் கட்சி அழிவதை எங்களால் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க முடியாது. அதனால் தான் இந்தப் போராட்டம். இனியும் எம்ஆர்கே-யின் நடவடிக்கைகளை தலைமை சகித்துக் கொண்டிருந்தால் மாவட்டத்தில் உள்ள 5 தொகுதிகளும் மீண்டும் மாற்றுக் கட்சியினர் வசமாகிவிடும்.
இதைத் தடுக்க வேண்டுமானால் எம்ஆர்கே-க்குப் பதிலாக இன்னொருவரை பொறுப்பு அமைச்சராக நியமிக்க வேண்டும். அப்படி இல்லாமல் மீண்டும் அவரே நீடித்தால் அவருக்கு எதிராக முதல்கட்டமாக கருப்புக் கொடி காட்டுவோம். அதன் பிறகு என்ன செய்வோம் என்பதை இப்போதைக்குச் சொல்லமுடியாது. அமைச்சர் சிவசங்கரை பொறுப்பு அமைச்சராக நியமிக்கப் போவதாகச் சொல்கிறார்கள். கட்சியை உடைக்காமல், நிர்வாகிகளை அரவணைத்துச் செல்லும் யாரை நியமித்தாலும் சரிதான். ஆனால், எம்ஆர்கே இனி எங்களுக்கு வேண்டாம்; அதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்” என்றனர்.
இதுதொடர்பாக விளக்கமறிய அமைச்சர் எம்ஆர்கே-யை போனில் தொடர்பு கொண்டோம். அவர் நமது லைனுக்கு வரவில்லை. அவரது தனி உதவியாளர் தேவ் ஆனந்திடம் பேசியபோது, “பொறுப்பு அமைச்சராக இந்த மாவட்டத்துக்கு அமைச்சர் கொண்டு வந்துள்ள திட்டங்களின் பட்டியல் மிக நீளம். அந்தளவுக்கு தனது சிறப்பான பங்களிப்பை தருமபுரி மாவட்ட வளர்ச்சிக்கு அமைச்சர் வழங்கி வருகிறார். கட்சியில் நிர்வாக ரீதியாக சில மாற்றங்களைச் செய்யும் போது அதனால் பாதிக்கப்படும் சிலர் ஆதங்கத்தில் இதுபோன்று எதையாவது பேசுவார்கள். சென்னையில் முதல்வருடன் நடைபெற்ற முக்கிய ஆலோசனை கூட்டத்துக்கு எம்ஆர்கே-யும் அழைக்கப்பட்டிருந்தார்.
அதனால் தான், தருமபுரியில் 10-ம் தேதி நடப்பதாக இருந்த அரசு நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. மற்றபடி வேறெந்த காரணமும் இல்லை” என்றார். சொந்த மாவட்டமான கடலூர் கிழக்கு திமுக-வில் செய்ய வேண்டிய வேலைகள் நிறைய இருக்க, வந்த இடத்தில் அமைச்சர் எம்ஆர்கே-க்கு ஏன் இந்தப் பொல்லாப்பு?