சிலுவைப் போர் பற்றி நம்மில் பெரும்பாலானோர் அறிந்திருப்போம். இப்போது அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடுப்பது ‘தீர்வைப் போர்’ (Tariff War). இயற்பியல் பாடத்தில் ராமன் விளைவைப் படித்திருக்கிறோம். இப்போது பொருளியல் அறிஞர்கள் டிரம்ப் விளைவால் (Trump Effect) உலக வணிகத்துக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்புகள் குறித்து விவாதிக்கிறார்கள்.
நமக்கு ‘எதிர் சேவை’ தெரியும்; அது கள்ளழகரை மதுரை மக்கள் வரவேற்கும் திருவிழா. கடந்த ஏப்ரல் 2 அன்று டிரம்ப் அறிவித்திருப்பது ‘எதிர் தீர்வை’ (Reciprocal Tariff). இதை உலக நாடுகள் வரவேற்கவில்லை. கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றன. இந்தியாவும் இந்தத் தீர்வையிலிருந்து தப்பவில்லை.
தீர்வையாவது யாது? – அயல் நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு ஓர் அரசாங்கம் விதிக்கிற வரிதான் தீர்வை. இது அந்தப் பொருளின் மதிப்பில் ஒரு குறிப்பிட்ட சதவீதமாக இருக்கும். சீனாவிலிருந்து இறக்குமதியாகும் ஆயத்த ஆடைகளுக்கு இந்திய அரசு 25% தீர்வை விதிக்கிறது என்று வைத்துக்கொள்வோம்.
ரூ.1,000 மதிப்புள்ள ஒரு சீன உடுப்பை இறக்குமதி செய்யும் நிறுவனம், இந்திய அரசுக்கு ரூ.250 தீர்வையாகச் செலுத்த வேண்டும். இந்த ரூ.250இல் ஒரு பகுதியை அந்த நிறுவனம் தனது லாபத்திலிருந்து கொடுக்கலாம். ஆனால் அதில் பெரும் பகுதி அல்லது முழுத் தீர்வைத் தொகையும் பயனர் தலையில்தான் விடியும். ஆகவே தீர்வைகள் பயனர்களுக்கு நன்மை பயக்காது.
பொதுவாகத் தீர்வைகள் விதிக்கப்படுவது உள்ளூர் உற்பத்தியாளர்களைப் பாதுகாப்பதற்காக. அயல்நாட்டுப் பொருள்களின் மீது தீர்வைகள் விதிக்கப்பட்டால் அவற்றின் விலை கூடும். அதைக் காட்டிலும் உள்ளூர் பொருள்களின் விலை குறைவாக இருக்கும் அல்லது அப்படி இருக்கும்படியாக அயல் நாட்டுப் பொருள்களுக்குத் தீர்வை விதிக்கப்படும். இந்தியா அப்படித்தான் செய்துவருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் இது அதிகமாகிவிட்டது.
இது கட்டற்ற வணிகத்துக்கு எதிரானது. உலகெங்கும் உள்ள பயனர்களுக்குப் பொருள்கள் சகாய விலையில் கிடைக்க வேண்டும் என்பதுதான் உலக வர்த்தக அமைப்பின் (WTO) அடிப்படைக் கொள்கை. தீர்வைகள் அதற்கு எதிராக இயங்கும். மேலும், தீர்வைகள் உள்ளூர் உற்பத்தியாளர்களைப் பாதுகாக்கும். அவர்களது பொருள்கள் உள்நாட்டில் விற்பனையாகிவிடும்; ஆனால், பன்னாட்டுச் சந்தையில் போட்டியிட முடியாமல் போகும்.
அமெரிக்கா இறக்குமதி செய்யும் பொருள்களில் பலவும் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படுவதில்லை. பிறகு, ஏன் டிரம்ப் தீர்வை விதிக்கிறார்? இந்தத் தீர்வைகளால் அமெரிக்கச் சந்தையில் பொருள்களின் விலை கூடும். உற்பத்தியாளர்கள் தங்கள் ஆலைகளை அமெரிக்காவில் நிறுவி இந்தத் தீர்வைகளில் இருந்து தப்பிக்க முன்வருவார்கள் என்று டிரம்ப் எதிர்பார்க்கிறார்.
இதனால் அமெரிக்காவில் தொழில் பெருகும், தொழிலாளிகள் வாழ்வார்கள், அமெரிக்கா மீண்டும் செல்வந்த நாடாகும் என்கிறார். ஆனால், தொழிற்சாலைகளில் பணியாற்றத்தக்க மனித வளம் அமெரிக்காவில் குறைவு. அமெரிக்காவில் உற்பத்திச் செலவு அதிகம். ஆகவே, இது நடக்கப்போவதில்லை.
அமெரிக்கா பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் பொருள்களைக் காட்டிலும் இறக்குமதி செய்பவை அதிகம். இந்த வித்தியாசம் அல்லது அமெரிக்காவின் குறை வணிகம் (Trade Deficit) 1.2 டிரில்லியன் டாலர் (ரூ.102 லட்சம் கோடி). பிற நாடுகள் விதிக்கும் தீர்வைகள் அதிகமாகவும் அமெரிக்கா விதிக்கும் தீர்வைகள் குறைவாகவும் இருப்பதுதான் இதற்குக் காரணம் என்கிறார் டிரம்ப்.
உலக வர்த்தக அமைப்பின் மதிப்பீட்டின்படி, இறக்குமதி செய்யும் பன்னாட்டுப் பொருள்கள் மீது இந்தியா சராசரியாக 17% தீர்வை விதிக்கிறது; அமெரிக்கா விதிக்கும் சராசரித் தீர்வை 3.3%தான். பொதுவாக, கட்டற்ற வணிகத்தை ஆதரிக்கும் வளர்ந்த நாடுகளின் தீர்வை குறைவாகத்தான் இருக்கும். அமெரிக்காவின் இந்த நாள்பட்ட நிலைப்பாடு தவறு என்கிறார் டிரம்ப். அதற்கு எதிர்த்திசையில் பயணிக்கிறார்.
எதிர் தீர்வை: அமெரிக்கப் பொருள்களின் மீது இந்தியா விதிக்கும் தீர்வைகள் மேற்குறிப்பிட்ட பன்னாட்டுச் சராசரியான 17%விட அதிகம் என்கிறார் டிரம்ப். அவரது கணக்கீட்டின்படி, இந்திய இறக்குமதிகளுக்கு 26% எதிர் தீர்வை விதிக்கப்போவதாக அறிவித்திருக்கிறார். சீனப் பொருள்களுக்கு, முன்னதாக 20% தீர்வை விதித்திருந்த டிரம்ப், இப்போது அதை 54%ஆக உயர்த்தியிருக்கிறார்.
ஜப்பான் (24%), தென் கொரியா (25%), தைவான் (32%) ஐரோப்பிய ஒன்றியம் (20%), கனடா (25%), மெக்சிகோ (25%), வியட்நாம் (46%) முதலான அமெரிக்காவின் எல்லா வணிகப் பங்காளிகள் மீதும் இந்த எதிர் தீர்வையை ஏவியிருக்கிறார் டிரம்ப். இந்தத் தீர்வை, நாடுகளைப் பொறுத்து குறைந்தபட்சம் 10% ஆகவும் அதிகபட்சம் 49% ஆகவும் விதிக்கப்பட்டிருக்கிறது.
தாங்களும் அமெரிக்கப் பொருள்களுக்குக் கூடுதல் தீர்வை விதிக்கப்போவதாக கனடா, மெக்சிகோ, இத்தாலி முதலான நாடுகளும் ஐரோப்பிய ஒன்றியமும் அறிவித்திருக்கின்றன. ஜப்பான், தென் கொரியா முதலான நாடுகள் கண்டனம் தெரிவித்திருக்கின்றன.
இந்தியா இதுவரை வலுவான எதிர்க் கருத்தைத் தெரிவிக்கவில்லை. இந்த ‘எதிர் தீர்வை’ என்னும் கத்தி இறங்காமல் இருக்க இந்திய அரசு கடந்த மூன்று மாதங்களாகப் பாடுபட்டது. அமெரிக்க இறக்குமதிப் பொருள்களில் மது, மோட்டார் சைக்கிள், கார், பொம்மை முதலானவற்றின் தீர்வையைக் குறைத்தது. டிஜிட்டல் வணிகத்திலும் வரியைக் குறைத்தது. இந்தியாவின் வணிக அமைச்சரவை தொடர்ந்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தியது.
எலான் மஸ்க்கின் செயற்கைக்கோள் வழியிலான ‘ஸ்டார்லிங்க்’ (Starlink) இணையச் சேவையை ஜியோவும் ஏர்டெல்லும் சந்தைப்படுத்த முன்வந்தன. அமெரிக்காவின் ‘எஃப்-15’ போர் விமானத்தை இந்தியா வாங்கிக்கொள்ளும் என்று டிரம்ப்பே அறிவித்தார். கடைசி இரண்டும் இந்தியாவின் சுயசார்பான வளர்ச்சிக்கு உதவாது.
என்றாலும் அவை டிரம்ப்பை மகிழ்விக்கும் என்று இந்திய அரசு கருதியிருக்கலாம். ஆனால், இந்த நடவடிக்கைகள் எதனாலும் டிரம்ப்பின் எதிர் தீர்வையை நிறுத்த முடியவில்லை. இந்தியாவில்இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாகும் மின்னணு, ஆபரணம், வைரம், தோல், ஆட்டோமொபைல் தொடர்பான பொருள்களின் வணிகம் இந்த எதிர் தீர்வையால் கணிசமாகப் பாதிக்கப்படும்.
என்ன செய்யலாம்? – இந்தியா-அமெரிக்கா இருதரப்பு வணிக ஒப்பந்தம் (Bilateral Trade Agreement) ஒன்று பேச்சுவார்த்தையில் இருக்கிறது. செப்டம்பர் மாதம் அதன் முதல் வரைவு தயாராகலாம். அதை வேகப்படுத்தி இந்த எதிர் தீர்வையைக் குறைக்க வேண்டும் என்று சில வணிக அமைப்புகள் சொல்கின்றன. ஆனால், இப்படியான நம்பிக்கைகள் பலன் தராது. ஏனெனில், டிரம்ப்பின் தடாலடி அரசியலில் எதுவும், எப்போதும் மாறலாம்.
இந்தியா முதலில் தன்னை வலுப்படுத்திக்கொள்ள வேண்டும். நமது நாட்டில் மனித வளம் இருக்கிறது. கல்வி, மருத்துவம் வழங்கி அரசு நம் இளைஞர்களைத் திறனுள்ள தொழிலாளர்களாக்க வேண்டும். நமது உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும்.
சிவப்பு நாடாக்களைக் களைய வேண்டும். சாதி மதச் சண்டைகளை விட்டொழிக்க வேண்டும். அப்போது இந்தியா ஓர் உற்பத்தி மையமாக உருவாகும்; அதன் தொழில், வணிகத் துறைகளுக்கு அரசாங்கத்தின் பாதுகாப்பு வளையங்கள் தேவைப்படாது. அவை பன்னாட்டுச் சந்தையில் போட்டியிடக்கூடிய நிலை ஏற்படலாம். மக்களின் வாழ்நிலையும் உயரலாம்.
அடுத்து, இந்தியா தனது அமெரிக்கச் சார்பு நிலையைப் பரிசீலிக்க வேண்டும். தனது எதிர் தீர்வைகளால் அமெரிக்காவில் பொருள்களின் விலை அதிகமாகும் என்பதும் பணப்புழக்கம் குறையும் என்பதும் டிரம்ப்புக்குத் தெரியும். அவர் இதை ஓர் அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்துகிறார்.
மற்ற பல நாடுகள் அதே ஆயுதத்தையே கையில் எடுத்திருக்கின்றன. நாள்பட்ட பகையாளிகளான சீனாவும், ஜப்பானும், தென் கொரியாவும் மார்ச் இறுதியில் தமக்குள் ஒரு கட்டற்ற வணிக ஒப்பந்தத்தைக் கைக்கொண்டன. அமெரிக்க எதிர்ப்பில் பல நாடுகளும் இணைகின்றன. டிரம்ப் அறிவித்திருப்பது ஒரு வணிகப் போர். இது வணிகத் தளத்திலும் அரசியல் தளத்திலும் எதிர்கொள்ள வேண்டும். அதற்கு இந்தியா தன்னை முழுமையாகத் தகவமைத்துக்கொள்ள வேண்டும்.
–