ஈரோடு: ரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்ட இரு தொழிலாளர்கள் விஷவாயு தாக்கி உயிரிழந்தனர்.
தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் இருந்து, டேங்கர் லாரி மூலம் அலுமினியம் குளோரைடு என்ற ரசாயனம் கடந்த 27-ம் தேதி திருப்பூரில் உள்ள சலவைப் பட்டறைக்கு கொண்டு வரப்பட்டது. பட்டறையில் ரசாயனம் இறக்கப்பட்ட பின்பு, சித்தோடு கோணவாய்க்கால் அருகே செயல்படும் வாகனங்களை சுத்தம் செய்யும் மையத்துக்கு லாரி கொண்டு வரப்பட்டது.
நேற்று காலை டேங்கர் லாரியை சுத்தம் செய்யும் பணியில் சித்தோடு பகுதியைச் சேர்ந்த தொழிலாளர்கள் சந்திரன் (62), யுகானந்தன் (50), செல்லப்பன் (52) ஆகியோர் ஈடுபட்டனர். லாரியில் ஏற்றி வரப்பட்ட ரசாயனத்தின் தாக்கம் காரணமாக, விஷவாயு தாக்கி மூவரும் மூச்சுத்திணறி மயங்கியுள்ளனர்.
அருகில் இருந்தோர், மூவரையும் மீட்டு பவானி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், மருத்துவமனை க்கு செல்லும் வழியிலேயே யுகானந்தன், சந்திரன் ஆகியோர் உயிரிழந்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் பவானி அரசு மருத்துவமனையில் செல்லப்பன் சிகிச்சை பெற்று வருகிறார். யுகானந்தன், சந்திரன் ஆகியோரின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்காக பெருந்துறையில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனை க்கு அனுப்பி வைக்கப்பட்டன.
இந்த சம்பவம் குறித்து சித்தோடு போலீஸார் விசாரிக்கின்றனர். ரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரியில் இருந்து விஷ வாயு ஏற்பட்டதால் இருவரும் இறந்திருக்கலாம் என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.