சென்னை: உடன்குடி, குந்தா, கொள்ளிமலை உள்ளிட்ட புதிய மின்னுற்பத்தி திட்டங்களை இந்த ஆண்டுக்குள் முடித்து, மின்னுற்பத்தியை தொடங்க வேண்டும் என மின்வாரியத்துக்கு, மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக மின்வாரியம், திருவள்ளூர் மாவட்டம், எண்ணூரில் தலா 600 மெகாவாட் திறனிலும், தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் தலா 660 மெகாவாட் திறனில் இரு அலகுகள் உடைய மின் நிலையங்களை அமைத்து வருகிறது. மேலும், நீலகிரி மாவட்டத்தில் தலா 125 மெகாவாட் திறனில் 4 அலகுகள் உடைய குந்தா நீரேற்று மின்நிலையமும், நாமக்கல்லில் 20 மெகாவாட் திறனில் கொல்லிமலை நீர்மின் நிலையமும் அமைக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையங்களின் கட்டுமானப் பணிகள் தொடங்கி 4 ஆண்டுகளுக்கு மேல் ஆகின்றன. திட்டமிட்ட காலத்துக்குள் பணிகள் முடிவடையாததால், மின்னுற்பத்தியை தொடங்க தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், புதிய மின்திட்டங்களின் நிலை குறித்து மின்வாரிய அதிகாரிகளிடம், மின்சார ஒழுங்கு ஆணையம் ஆய்வு நடத்தி உள்ளது. அதில், உடன்குடி மின்நிலையத்தின் முதல் அலகில் அடுத்த மாதமும், 2-வது அலகில் வரும் ஆகஸ்ட் மாதமும் மின்னுற்பத்தி தொடங்கப்பட இருப்பதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது.
மேலும், குந்தா மின்நிலையத்தின் 4-வது அலகில் வரும் ஜுலை மாதமும், 3-வது அலகில் ஆகஸ்ட் மாதமும், 2-வது மற்றும் முதலாவது அலகில் வரும் நவம்பர் மாதமும், கொல்லிமலை நீர்மின் நிலையத்தில் வரும் அக்டோபர் மாதமும் மின்னுற்பத்தி தொடங்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதையடுத்து, மின்சார ஒழுங்குமுறை ஆணையம் புதிய மின்திட்டங்களை இந்த ஆண்டு இறுதிக்குள் அனைத்துப் பணிகளையும் முடித்து மின்னுற்பத்தியை தொடங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தெரிவித்துள்ளது.