மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மழை வெள்ளம் வடியும் வரை அவர்களுக்கான நிவாரணத்தைத் தொடர்ந்து வழங்க வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
“தமிழகத்தில் வரலாறு காணாத அளவிற்கு மழைப்பொழிவின் காரணமாகப் பல்வேறு வகையான விவசாய நிலங்களும் மூழ்கி சேதம் அடைந்துள்ளன. மக்கள் வாழும் பகுதிகளிலும் தண்ணீர் புகுந்து மிகுந்த சிரமத்திற்குள்ளாகி இருக்கின்றனர்.
சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மக்கள் வசிப்பிடங்களில் தண்ணீர் சூழ்ந்துள்ளது. இதனால் மக்கள் இயல்பு நிலை பாதிக்கப்பட்டு மிகுந்த சிரமத்திற்குள்ளாகி இருக்கின்றனர். தண்ணீர் சூழ்ந்துள்ள தாழ்வான பகுதிகளில் உள்ள மக்களை அரசு மேடான பகுதிகளுக்குப் பாதுகாப்பாகக் கொண்டுசெல்ல வேண்டும். அவர்களுக்கு உணவு மற்றும் அத்தியாவாசியத் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும். மழைநீர் வடியும் காலம் வரை அவர்களை அங்கேயே தங்கவைத்து உணவளிக்க வேண்டும்.
மழை தண்ணீரால் நோய்த்தொற்று அதிகமாகப் பரவக்கூடிய ஆபத்து இருப்பதால் அவற்றைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகளை அரசு ஏற்படுத்த வேண்டும். அரசு மருத்துவனைகளில் தேவையான மருந்துகளையும் மருத்துவ உபகரணங்களையும் தயாராக வைத்திருக்க வேண்டும். குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் ஆரோக்கியத்தில் முழுக் கவனம் செலுத்த வேண்டும்.
மழை வெள்ளத்தால் தமிழகத்தில் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் முற்றிலுமாக மூழ்கியுள்ளன. அதோடு பலவகையான விவசாய நிலங்களும் தண்ணீர் சூழ்ந்து பாதிக்கப்பட்டுள்ளது. அவற்றை முறையாகக் கணக்கிட்டு உரிய இழப்பீட்டைக் காலம் தாழ்த்தாமல் வழங்க வேண்டும். ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட இழப்பீடு போதுமானதாக இல்லை.
தற்பொழுது மேற்கொள்ளும் பணியென்பது மிகுந்த சவாலான பணி. அவற்றை முறையான துரிதமான திட்டமிடலாலும் முன்னேற்பாட்டாலும் செய்து முடிக்க வேண்டும்.”
இவ்வாறு ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.