புதுடெல்லி: டாஸ்மாக் நிறுவனத்தில் நடத்தப்பட்ட அமலாக்கத் துறை சோதனைக்கு எதிரான வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்றக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை தமிழக அரசு திரும்பப் பெற்றது. உச்ச நீதிமன்றத்தின் அதிருப்தியின் எதிரொலியாக, தமிழக அரசு மனுவை வாபஸ் பெற்றது.
டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத் துறை கடந்த மாதம் 6-ம் தேதி முதல் 8-ம் தேதி வரை நடத்திய சோதனையை சட்டவிரோதம் என அறிவிக்கக் கோரியும், விசாரணை என்ற பெயரில் டாஸ்மாக் அதிகாரிகளை துன்புறுத்தக் கூடாது என தடை விதிக்கக் கோரியும் தமிழக அரசு மற்றும் டாஸ்மாக் நிர்வாகம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இந்த வழக்குகளை ஏற்கெனவே விசாரித்த நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், என்.செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு, அமலாக்கத் துறையின் மேல்நடவடிக்கைக்கு இடைக்காலத் தடை விதித்திருந்தனர்.
நீதிபதிகள் விலகல்: இந்த வழக்கு விசாரணையில் இருந்து நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், என்.செந்தில்குமார் ஆகியோர் விலகியதை அடுத்து, இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், கே.ராஜசேகர் ஆகியோர் அடங்கிய அமர்வு, அமலாக்கத் துறையின் பதில் மனுவுக்கு, தமிழக அரசு தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஏப்.28-ம் தேதிக்கு தள்ளி வைத்திருந்தனர்.
உச்ச நீதிமன்றத்தில் மனு: இந்நிலையில், ‘இந்த வழக்கை விசாரித்து வரும் நீதிபதி கே.ராஜசேகர், அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜராகும் வழக்கறிஞரின் சகோதரர் என்பதால் வழக்கை வேறு அமர்வுக்கு மாற்ற வேண்டும்’ எனக் கோரி மூத்த வழக்கறிஞர் கே.எம்.விஜயன், தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் மற்றும் நீதிபதி முகமது ஷபீக் ஆகியோர் அடங்கிய அமர்வில் முறையீடு செய்தார்.
அதற்கு தலைமை நீதிபதி, ‘இந்த வழக்கை விசாரித்து வரும் நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், கே.ராஜசேகர் தலைமையிலான அமர்விலேயே முறையீடு செய்ய வேண்டும்’ என அறிவுறுத்தினார். மேலும், அந்த அமர்வு எடுக்கும் முடிவுகளுக்கு ஏற்ப நிர்வாக ரீதியாக உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில், டாஸ்மாக் நிறுவனத்தில் நடத்தப்பட்ட அமலாக்கத்துறை சோதனைக்கு எதிரான வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்றக் கோரி தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
உயர் நீதிமன்றம் கண்டனம்: இந்நிலையில், நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், கே.ராஜசேகர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று (ஏப்.8) டாஸ்மாக் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, “தமிழக அரசு தரப்பில், இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளதால், வழக்கை தள்ளிவைக்க வேணடும்,” என கோரிக்கை வைக்கபட்டது.
அப்போது நீதிபதிகள், “வழக்கு விசாரணைக்கு வந்தபோதே உச்ச நீதிமன்றம் செல்வதாக கூறியிருந்தால், வழக்கை நாங்கள் பட்டியிலிட்டிருக்க மாட்டோம். இதன் மூலம் நீங்கள் நீதிமன்றத்தை இழிவுபடுத்திவிட்டீர்கள். குறைந்தபட்சம் நீதிமன்றத்துக்காவது நேர்மையாக இருக்க வேண்டும் என அரசுக்கு கண்டனம் தெரிவித்தனர். மேலும், இந்த மனு பொது நலனுக்காக தாக்கல் செய்யப்பட்டதா? அல்லது டாஸ்மாக் அதிகாரிகள் சிலரை காப்பாற்றுவதற்காக தாக்கல் செய்யபட்டதா?” என தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பினர்.
அப்போது அரசுத் தரப்பில், மாநில அரசின் உரிமைக்காகவே மனு தாக்கல் செய்யப்பட்டதாகவும், மனு தாக்கல் செய்ய எங்களுக்கு உரிமை உள்ளதாகவும் தெரிவிக்கபட்டது.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு எடுக்கப்படவில்லை என்றால் பிற்பகல் வாதங்களை முன்வைக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்திருந்தனர்.
உச்ச நீதிமன்றத்தில் வாபஸ்: இந்நிலையில், டாஸ்மாக் விவகாரம் தொடர்பான வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்றக் கோரி தமிழக அரசு தாக்கல் செய்த வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் தலையிட மறுத்த உச்ச நீதிமன்றம், டாஸ்மாக் விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்றமே முடிவு செய்யட்டும் என தெரிவித்தது. இதையடுத்து, வழக்கைத் திரும்ப பெறுவது குறித்து அரசின் கருத்தைக் கேட்டு தெரிவிப்பதாக, தமிழக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. பின்னர், வழக்கை தமிழக அரசு திரும்பப் பெற்றது.