சென்னை: கோயில் மனைகளுக்கு பழையபடி பகுதி முறையை அமல்படுத்துவது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு கோயில் சார்ந்து, சாராத மனைகளில் குடியிருப்போர் சங்க கூட்டமைப்பு சார்பில், சென்னையில் கோட்டை நோக்கி பேரணி நடைபெற்றது.
கோயில் மனைகளுக்கு சதுர அடி கணக்கில் வாடகை நிர்ணயிப்பதை ரத்து செய்து, பழைய பகுதி முறையை அமல்படுத்த வேண்டும்; பகுதி முறைக்கு மாற்றும் வரை அரசாணை 208-ன்படி அமைக்கப்பட்ட கமிட்டியின் முடிவு வரும் வரைக்கும் பழைய வாடகையை பெற்றுக்கொள்ள வேண்டும், மேலும் தற்போது குடியிருப்பவருக்கே நிபந்தனையின்றி பெயர் மாற்றம் செய்ய வேண்டும்; அத்தியாவசியத் தேவைகளான மின் இணைப்பு, குடிநீர், கழிவுநீர் இணைப்பு பெறுவதற்கு தடையில்லா சான்று பெற வேண்டும் என்றும், கோயில் பெயரிலேயே இணைப்பை பெற வேண்டும் என்றும் வற்புறுத்துவதை கைவிட வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு கோயில் சார்ந்து, சாராத மனைகளில் குடியிருப்போர் சங்க கூட்டமைப்பு சார்பில், கோட்டை நோக்கி பேரணி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, இக்கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த கூட்டமைப்பு சார்பில், சென்னை புதுப்பேட்டை லாங் கார்டன் சாலையில் இருந்து இன்று (ஏப்.8) பேரணி தொடங்கி, எஸ்.ஜி.ஸ்கொயர் வரை நடைபெற்றது. முன்னதாக,
இப்பேரணியை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் முத்தரசன் தொடங்கி வைத்து பேசியதாவது: “இந்த கோரிக்கையில் அடிப்படையானது அனைவருக்கும் பட்டா வேண்டும் என்பதாகும். ஆனால் இப்போது நாம் கோருவது வாடகை முறையை ரத்து செய்து, கடந்த காலங்களில் பின்பற்றிய பகுதிமுறை அடிப்படையில் வசூல் செய்ய வேண்டும்.
மின் இணைப்பு வழங்குவது போன்ற நடவடிக்கையில் பிரச்சினை இருக்கக்கூடாது. ஆங்காங்கே கோயில் நிர்வாக அதிகாரிகள் தங்கள் விருப்பத்துக்கு கட்டணத்தை நிர்ணயிப்பதோ, கட்டணங்களை கொடுக்காதவர்களை காலி செய்ய அச்சுறுத்தவது, மிரட்டுவது தொடர்ந்து நடைபெறுகிறது. மிரட்டி பணம் வசூல் செய்கிறார்கள். பணத்துக்கு முறையாக ரசீது கொடுப்பது இல்லை. சில இடங்களில் பணத்தை பெற்றுகொண்டு நன்கொடை என்ற பெயரில் ரசீது கொடுக்கிறார்கள்.
இப்படிப்பட்ட அராஜகப்போக்கு இருக்கிறது. இவைகள் எல்லாம் முற்றாக நீக்கப்பட்டு, முழுமையாக வாடகை முறையை ரத்து செய்ய வேண்டும். இதுதொடர்பாக ஏற்கெனவே கோரிக்கைகளை கொடுத்து இருக்கிறோம். இருப்பினும், கோட்டை நோக்கி பேரணி சென்று கொடுப்பதால் கோரிக்கைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும். நமது கோரிக்கைக்கு முதல்வர் செவிசாய்ப்பார் என்று நம்புகிறோம், என்று அவர் பேசினார்.
தொடர்ந்து, வாடகை முறையை ரத்து செயயக் கோரி பேரணியில் கலந்துகொண்டவர்கள் கோஷங்களை எழுப்பினர். இப்பேரணியில் கூட்டமைப்பு மாநிலத்தலைவர் வி.ஏ.பாலசுப்பிரமணியன், மாநில பொருளாளர் எஸ்.ஏழுமலை மற்றும் முக்கிய கூட்டமைப்பு நிர்வாகிகள் மற்றும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். பேரணியின் இறுதியில் நடைபெற்ற கூட்டத்தில் விசிக தலைவர் திருமாவளவன் பங்கேற்று பேசினர்.