சென்னை: “ஆளுநருக்கு எதிரான உச்ச நீதிமன்ற தீர்ப்பின் மூலம் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களின் சுயாட்சியையும் முதல்வர் ஸ்டாலின் நிலைநாட்டி இருக்கிறார்,” என்று திமுக வழக்கறிஞர் வில்சன் விளக்கமளித்துள்ளார்.
இதுதொடர்பாக தலைமைச் செயலக வளாகத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: “தமிழக அரசு சட்டப்பேரவையில் இயற்றி அனுப்பிய 10 சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி காலம் தாழ்த்தி வந்தார். இதையொட்டி ஆளுநருக்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த வழக்கில், மைல்கல்லான ஒரு தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ளது. அதன்படி தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றிய சட்ட மாசோதாக்களுக்கு ஆளுநர் காலம் தாழ்த்தாமல் ஒரு மாதத்துக்குள் (30 நாட்களில்) ஒப்புதல் வழங்கவேண்டும்.
அமைச்சரவையில் எடுக்கப்படும் முடிவுகளுக்கு ஏற்ப நடந்து கொள்ள வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இத்துடன் இந்த 10 மசோதாக்களுக்கும் ஆளுநரின்றி உச்ச நீதிமன்றமே ஒப்புதல் வழங்கியும் உள்ளது. இந்த மசோதாக்கள் இன்று முதல் நடைமுறைக்கு வரும். மேலும் இனிமேல் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசின் அமைச்சரவை கூட்டம் எடுக்கும் முடிவுகளின் அடிப்படையில் தான் ஆளுநர் நடந்துகொள்ள வேண்டும். அதைமீறி ஆளுநர் நடந்து கொள்ளக் கூடாது எனவும் இந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், எந்த மசோதாக்களுக்கு எல்லாம் குடியரசு தலைவர் ஒப்புதல் தேவைப்படுகிறதோ அதை மட்டும் தான் குடியரசு தலைவருக்கு அனுப்ப வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுவும் 3 மாத காலத்துக்குள் அனுப்ப வேண்டும். அந்தவகையில் உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்பானது வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பாகும். இது தமிழகத்துக்கு மட்டுமல்ல, இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தும். இந்த வழக்கின் மூலம் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களின் சுயாட்சியையும் தமிழக முதல்வர் நிலைநாட்டி இருக்கிறார்,” என்று அவர் கூறினார்.