ஆந்திராவின் விசாகப்பட்டினம் அருகே அணுசக்தி நீர்மூழ்கிகளுக்காக புதிய கடற்படைத் தளம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த கடற்படைத் தளம் அடுத்த ஆண்டில் பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் கடற்படையின் கிழக்கு பிராந்திய தலைமையகம் செயல்படுகிறது. தற்போது விசாகப்பட்டினம் கடற்படைத் தளத்தில் ஒரே நேரத்தில் 50 போர்க்கப்பல்களை நிறுத்தி வைக்க முடியும். வரும் 2037-ம் ஆண்டுக்குள் புதிதாக 25 போர்க்கப்பல்கள் கிழக்கு பிராந்திய கடற்படையில் இணைக்கப்பட உள்ளன.
இதை கருத்தில் கொண்டு விசாகப்பட்டினத்தில் இருந்து 50 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள ராம்பில்லியில் ஐஎன்எஸ் வர்ஷா என்ற பெயரில் புதிய கடற்படைத் தளம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த கடற்படைத்தளம் அணுசக்தி நீர்மூழ்கிகளுக்கான சிறப்பு தளமாக செயல்பட உள்ளது.
இதுகுறித்து இந்திய கடற்படை வட்டாரங்கள் கூறியதாவது: இந்திய கடற்படையில் டீசலில் இயங்கும் 16 நீர்மூழ்கிகள் உள்ளன. அதோடு அணு சக்தியில் இயங்கும் ஐஎன்எஸ் அரிஹந்த், ஐஎன்எஸ் அரிகாட், ஐஎன்எஸ் அரிதாமன் ஆகிய 3 நீர்மூழ்கிகள் உள்ளன. பெயரிடப்படாத மற்றொரு அணுசக்தி நீர்மூழ்கியின் சோதனை ஓட்டம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. புதிய நீர்மூழ்கி விரைவில் கடற்படையில் இணைக்கப்படும். ரஷ்யா, பிரான்ஸுடன் இணைந்து புதிய அணுசக்தி நீர்மூழ்கிகளை தயாரிக்கும் திட்டங்கள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.
இந்த சூழலில் அணுசக்தி நீர்மூழ்கிகளுக்காக ஆந்திராவின் ராம்பில்லியில் ஐஎன்எஸ் வர்ஷா என்ற புதிய கடற்படைத் தளம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த தளத்தில் ஒரே நேரத்தில் 12 அணுசக்தி நீர்மூழ்கிகளை நிறுத்தி வைக்க முடியும். அதோடு போர்க்கப்பல்களை நிறுத்தி வைக்கவும் வசதிகள் செய்யப்பட்டு உள்ளன. அணுசக்தி நீர்மூழ்கிகளுக்காக பாபா அணு சக்தி ஆராய்ச்சி கழகத்தின் சிறப்பு மையமும் அமைக்கப்பட உள்ளது. அடுத்த ஆண்டில் ஐஎன்எஸ் வர்ஷா கடற்படைத் தளம் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்.
இந்த கடற்படைத் தளத்தில் இருந்து வங்கக் கடல் மட்டுமன்றி இந்திய-பசிபிக் பிராந்தியம் வரை கண்காணிக்க திட்டமிடப்பட்டு இருக்கிறது. அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா, இந்தியா ஆகிய 4 நாடுகளின் கூட்டமைப்பான குவாட் உடன் இணைந்து ஐஎன்எஸ் வர்ஷா கடற்படைத் தளம் செயல்படும்.
கார்வார் கடற்படைத் தளம்: கர்நாடகாவின் கார்வாரில் ஐஎன்எஸ் கடம்பா கடற்படைத் தளம் செயல்பட்டு வருகிறது. இது இயற்கை துறைமுகம் என்பதால், இந்த தளத்தில் விமானந்தாங்கி போர்க்கப்பல்களான ஐஎன்எஸ் விக்ரமாதித்யா, ஐஎன்எஸ் விக்ராந்த் உள்ளிட்ட பெரிய போர்க்கப்பல்கள் நிறுத்தப்பட்டு உள்ளன.
ஐஎன்எஸ் கடம்பா கடற்படைத் தளம் தொடர்ந்து விரிவுபடுத்தப்பட்டு வருகிறது. இந்த பணிகள் நிறைவடையும்போது 50 மிகப்பெரிய போர்க்கப்பல்களை நிறுத்தி வைக்க முடியும். தற்போது கார்வார் கடற்படைத்தளத்தில் போர் விமானங்கள் புறப்படவும், தரையிறங்கவும் புதிய விமான தளமும் அமைக்கப்பட்டு வருகிறது. இது, இந்த ஆண்டுக்குள் பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மும்பை, கோவா, கொச்சி, சென்னை, கொல்கத்தா, போர்ட் பிளேர் பகுதிகளிலும் இந்திய கடற்படைத் தளங்கள் உள்ளன. அனைத்து தளங்களும் விரிவுபடுத்தப்பட்டு வருகின்றன. இவ்வாறு கடற்படை வட்டாரங்கள் தெரிவித்தன.