அமராவதி: ஆந்திரப் பிரதேசத்தின் துணை முதல்வரும், ஜன சேனா கட்சித் தலைவருமான பவன் கல்யாணின் இளைய மகன் மார்க் சங்கர், சிங்கப்பூர் பள்ளியில் ஏற்பட்ட தீவிபத்தில் காயமடைந்துள்ளதாக அக்கட்சித் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக பவன் கல்யாணின் விசாகப்பட்டணம் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அவர் மகனைப் பார்க்க சிங்கப்பூர் செல்கிறார்.
இதுகுறித்து கட்சி அதன் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “பவன் கல்யாணின் இளைய மகன் மார்க் சங்கர் அவரின் பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் காயமடைந்துள்ளார். அவரின் கை மற்றும் கால்களில் தீக்காயம் ஏற்பட்டுள்ளது. மேலும் அவர் அதிகமான புகையை சுவாசித்ததால், மூச்சுத்திணறலும் ஏற்பட்டது. சிகிச்சைக்காக அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2017 அக்.10-ம் தேதி பிறந்த மார்க் சங்கர் சிங்கப்பூரில் உள்ள பள்ளியில் படித்துவருகிறார். இந்தநிலையில் ஆந்திராவின் அல்லுரி சீதாராமன் ராஜு மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பவன் கல்யாண் தனது சுற்றுப்பயணத்தை நிறுத்திவிட்டு சிங்கப்பூர் சென்று தனது மகனுடன் இருக்குமாறு அதிகாரிகளும், கட்சியினரும் தெரிவித்துள்ளனர்.
என்றாலும், சிங்கப்பூர் செல்வதற்கு முன்பு திட்டமிட்ட நிகழ்ச்சிகளை முடிக்க பவன் கல்யாண் முடிவெடுத்துள்ளார். அவர், தும்பகுடா மண்டலத்தில் உள்ள துரிடி கிரமாத்தில் வளர்ச்சித்திட்டங்களைத் தொடங்கி வைத்து, கிராமத்தினருடன் உரையாட உள்ளார்.
இந்த கூட்டத்தை முடித்துவிட்டு விசாகப்பட்டினம் சர்வதேச விமான நிலையம் சென்று அங்கிருந்து சிங்கப்பூர் செல்ல இருக்கிறார் பவன் கல்யாண். இதனிடையே விமான நிலையம் செல்லும் வழியில், இந்திராகாந்தி உயிரியல் பூங்காவில் நடைபெற உள்ள சுற்றுச்சூலல் சுற்றுலா கூட்டத்தில் கலந்து கொள்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.