பரேலி: உத்தரபிரதேசத்தில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட சம்பல் நகரில் புதிய புறக்காவல் நிலையம் கட்டப்பட்டுள்ளது. கலவரக்காரர்கள் வீசிய செங்கற்களை கொண்டு இது கட்டப்பட்டுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் சம்பல் நகரில் பழமையான ஷாஹி ஜமா மசூதி உள்ளது. இந்த மசூதியில் நீதிமன்ற உத்தரவின் பேரில் கடந்த நவம்பர் 24-ம் தேதி அதிகாரிகள் ஆய்வுக்கு சென்றபோது அவர்களுக்கும் உள்ளூர் மக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இது கலவரமாக மாறியதில் 5 பேர் உயிரிழந்தனர். வன்முறையாளர்கள் கல்வீசி தாக்கியதில் 30 போலீஸார் காயம் அடைந்தனர்.
இந்நிலையில் சம்பல் நரில் ஜமா மசூதிக்கு நேர் எதிரில் 100 நாட்களில் புறக்காவல் நிலையம் கட்டப்பட்டு, கடந்த ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டது. போலீஸார் மீது கலவரக்காரர்கள் வீசிய செங்கற்களும் இந்த கட்டிட கட்டுமானத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து சம்பல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரிஷன் குமார் பிஷ்னோய் கூறுகையில், “இது சம்பல் மாவட்டத்தின் முதல் உயர் தொழில்நுட்ப புறக்காவல் நிலையமாகும். இங்கு ஒரு காவல் நிலையத்திற்கு சமமான ஊழியர்கள் பணியமர்த்தப்படுவார்கள். நகரின் பாதுகாப்பு மேம்பாட்டுக்காக இது கட்டப்பட்டுள்ளது. மாவட்டத்தின் காவல் கட்டுப்பாட்டு அறை இங்கு அமைந்திருக்கும். சம்பலில் உள்ள அனைத்து சிசிடிவி கேமராக்களும் இங்கிருந்து கண்காணிக்கப்படும்” என்றார்.
சம்பல் மாவட்ட ஆட்சியர் ராஜேந்தர் பென்சியா கூறுகையில், “சம்பல் நகரில் அனைத்து மத மக்களும் வாழ்கின்றனர். நகரின் மையப் பகுதியில் இந்த புறக்காவல் நிலையம் கட்டப்பட்டுள்ளது. இதில் கண்காணிப்பு கோபுரம் உள்ளது. போதிய அளவு பணியாளர்கள் தங்குவதற்கு பல அறைகள் உள்ளன” என்றார்.
சம்பல் நகரில் மற்றொரு முக்கிய நிகழ்வாக காக்கு சராயில் உள்ள ஒரு கோயில் 46 ஆண்டுகளில் முதல்முறையாக கடந்த ஞாயிற்றுக்கிழமை ராம நவமியை முன்னிட்டு மீண்டும் திறக்கப்பட்டது. விஷ்ணுவின் 10-வது அவதாரமான கல்கி பிறக்கும் இடமாக சம்பல் பலராலும் கருதப்படுகிறது.