டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் தீவிபத்து நடந்தபோது, தீயை அணைக்கச் சென்ற வீரர்கள் கட்டுக்கட்டாக பணம் எரிந்து கொண்டிருப்பதை பார்த்து வீடியோ எடுத்து தலைமை நீதிபதியின் கவனத்துக்கு கொண்டு சென்றனர். இச்சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியதுடன், நீதிபதிகளின் சொத்துகள் குறித்து பொதுமக்கள் விவாதிக்கும் நிலையை ஏற்படுத்தியது.
உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் சொத்து விவரங்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பொதுமக்கள் பார்வைக்காக வெளியிடப்படுகிறது. ஆனால், உச்ச நீதிமன்றம் மற்றும் 25 உயர் நீதிமன்றங்களில் பணியாற்றும் 769 நீதிபதிகளில் 95 பேர் மட்டுமே தங்கள் சொத்து விவரங்களை இணைய தளத்தில் வெளியிட்டிருப்பதாக தெரிகிறது. மொத்த எண்ணிக்கையில் இது வெறும் 12.35 சதவீதம் மட்டுமே!
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் 33 பேரில் தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா உள்ளிட்ட 30 பேர் தங்கள் சொத்து விவரங்களை வெளியிட்டுள்ளனர். கடந்த 1-ம் தேதி நடந்த அனைத்து நீதிபதிகள் அடங்கிய கூட்டத்தில் 33 நீதிபதிகளும் தங்கள் சொத்து விவரங்களை வெளியிட ஒப்புக்கொண்ட செய்தி ஆறுதல் அளிக்கிறது.
ஆனால், உயர் நீதிமன்றங்களை பொறுத்தமட்டில், சொத்து விவரங்களை வெளியிட்ட நீதிபதிகளின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் இல்லை. சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் 65 பேரில் 5 பேர் மட்டுமே சொத்து விவரங்களை வெளியிட்டிருப்பது வெளிப்படைத்தன்மையை மேலும் அதிகரிக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகிறது.
நீதிபதிகள் தங்கள் சொத்து விவரங்களை பகிரங்கமாக அறிவிக்க வேண்டும் என்ற முடிவு, கடந்த 1997-ம் ஆண்டு மே 7-ம் தேதி அப்போதைய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ்.வர்மா தலைமையில் நடந்த அனைத்து நீதிபதிகள் அடங்கிய கூட்டத்தில் எடுக்கப்பட்டதாகும். நீதிபதிகளாக பொறுப்பேற்பவர்கள் பொறுப்பேற்றபின் நியாயமான கால அவகாசத்துக்குள் சொத்து, முதலீடு உள்ளிட்ட விவரங்களை இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. சொத்து விவரங்களை மட்டுமின்றி, நீதிபதிகள் என்னென்ன ஒழுக்க நெறிகளை பின்பற்ற வேண்டும் என்ற பட்டியலும் அப்போது வழங்கப்பட்டது.
நாட்டில் நீதித்துறை பாரபட்சமின்றி, அப்பழுக்கற்ற முறையில் நீதிபரிபாலனம் செய்கிறது என்பதை மக்கள் மன்றத்தின் முன்பாக நிரூபிப்பதற்காக இதுபோன்ற ஒழுக்க நெறிகளை அப்போதைய நீதிபதிகள் வகுத்துக் கொடுத்தனர். அந்த ஒழுக்க நெறிகள் செம்மையாக அமல்படுத்தப்படுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டியது இன்றைய காலகட்டத்தின் அவசியம் ஆகிறது.
மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் நாடாளுமன்ற மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் ஒவ்வொருவரும் தங்கள் சொத்துப் பட்டியலை அளிப்பது எத்தனை அவசியமோ, அதுபோலவேதான் மக்களின் நம்பிக்கைக்கு பாத்திரமான நீதிபதிகள், பதவியில் அமரும்போதே அவர்களது சொத்துப் பட்டியலை நீதித்துறை பெற்று பொதுவெளியில் வைக்கவேண்டும்!
இந்த வெளிப்படைத்தன்மை கீழமை நீதிமன்றங்களுக்கும் விஸ்தரிக்கப்பட வேண்டும். தங்களின் துன்பங்களுக்கு இறுதித் தீர்வாக மக்கள் எண்ணியிருக்கும் நீதித்துறை, அந்த மக்களின் நம்பிக்கையை மென்மேலும் பெற்றுச் சிறப்பதற்கு இதுவும் ஒரு நல்ல வழிமுறையாக அமையும்.