தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து வரும் தமன்னா, ரஜினியின் ‘ஜெயிலர்’ படத்தில் ‘காவாலா’ பாடலுக்கு நடனம் ஆடியிருந்தார். இந்தப் பாடல் வரவேற்பை பெற்றது. இதையடுத்து இந்தியில் வெளியாகி வெற்றி பெற்ற ‘ஸ்திரீ 2’ படத்தில் ‘ஆஜ் கி ராத்’ என்ற பாடலுக்கு நடனம் ஆடியிருந்தார். இந்தப் பாடலும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் அவர் மீண்டும், ஒரு பாடலுக்கு நடனம் ஆடுகிறார்.
அஜய் தேவ்கன், வாணி கபூர், ரிதேஷ் தேஷ்முக் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கும் படம், ‘ரெய்டு 2’. ராஜ்குமார் குப்தா இயக்குகிறார். உண்மைச் சம்பவங்களின் பின்னணியில் உருவாகும் இந்தப் படம் பொருளாதார குற்றம் தொடர்புடையது. “இதில் தமன்னா கவர்ச்சி பாடலுக்கு நடனம் ஆடுகிறார். அதற்காக மும்பையில் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டுப் படப்பிடிப்பு நடந்து வருகிறது. ‘காவாலா’, ‘ஆஜ் கி ராத்’ போல இந்தப் பாடலும் வரவேற்பைப் பெறும்” என்று படக்குழு தெரிவித்துள்ளது.