குன்னூர்: “தொழில்நுட்ப மாற்றம், உலக நிலவரங்கள் போன்றவை காரணமாக உலகில் பாதுகாப்பு சூழல் அதிவேகமாக மாறி வரும் நிலையில், முப்படை அதிகாரிகள் அவற்றை கருத்தில் கொண்டு வியூகங்கள் வகுத்து செயல்பட வேண்டும்” என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வலியுறுத்தியுள்ளார்.
நீலகிரி மாவட்டம், வெலிங்டனில் உள்ள முப்படை அதிகாரிகள் பயிற்சி கல்லூரியில் பட்டமளிப்பு விழா இன்று (ஏப்.10) நடைபெற்றது. இதில், 26 நட்பு நாடுகளைச் சேர்ந்த 38 மாணவர்கள், 3 பெண் அதிகாரிகள் உட்பட 478 அதிகாரிகள் 45 வாரகால பயிற்சியை நிறைவு செய்தனர். பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் அதிகாரிகளுக்கு பட்டங்கள் வழங்கி பேசியதாவது: மிகப்பெரிய நிலநடுக்கத்தை எதிர்கொண்ட மியான்மர் மற்றும் தாய்லாந்துக்கு இந்திய மக்களின் ஒற்றுமையையும் ஆதரவையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
மியான்மர் மக்களுக்கு சரியான நேரத்தில் நிவாரணம் வழங்குவது எங்கள் கடமையாக கருதுகிறோம். அறிவு, விழிப்புணர்வு மற்றும் தலைமைத்துவ திறன்கள் மிகுந்த இந்திய பாதுகாப்புப் படைகள் மற்றும் நட்பு நாடுகளின் இளம் தலைவர்களின் கூட்டத்தில் உரையாற்றுவது பெருமை. பயிற்சியை வெற்றிகரமாக முடித்ததற்காக உங்கள் ஒவ்வொருவரையும் நான் வாழ்த்துகிறேன்.வேகமாக மாறிவரும் சவால்களை எதிர்கொள்ளும் நீங்கள், நாடுகளின் தேசிய பாதுகாப்பை உறுதி செய்யும் கடினமான பணியைக் கொண்டிருக்கிறீர்கள்.
நாட்டு மக்களுக்கு வளமான எதிர்காலத்தை உருவாக்குவதற்கான பெரிய பொறுப்பு உங்களுக்கு காத்திருக்கிறது. இன்று உலகளாவிய புவி அரசியல் மூன்று முக்கிய அளவீடுகளால் மறுவரையறை செய்யப்படுகிறது. தேசிய பாதுகாப்பு முன்னுரிமைப்படுத்துவது,தொழில்நுட்பங்களை அறிவது போன்ற நுணுக்கங்களை ஆழமாக ஆராய்வது அவசியம். உலகளாவிய புவி அரசியல் நிலைமை மிகப்பெரிய மாற்றத்தை சந்தித்து வருகிறது. உலகமயமாக்கல், தீவிர தேசியவாதம், வளங்களின் பற்றாக்குறை, மனித இடப்பெயர்வு, உணவுப் பாதுகாப்பு, காலநிலை மாற்றம் தொடர்பான கவலைகள் மற்றும் பேரிடர் அச்சுறுத்தல் போன்ற பிரச்சினைகள் பெரிய அளவில் உள்ளன.
வர்த்தகம் மற்றும் நிதியை ஆயுதமயமாக்குதல், விநியோகச் சங்கிலிகளின் சீர்குலைவு, பெரும் மாற்றங்களை கொண்டு வரும் தொழில்நுட்பங்களின் மீதான ஏகபோகம் ஆகியவற்றால் ஏற்படும் கவலைகள் இதனுடன் சேர்ந்துள்ளன. இன்றைய தொழில்நுட்பம், புவி அரசியல் மற்றும் தேசிய பாதுகாப்பை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இயக்குகிறது. செயற்கை நுண்ணறிவு, ரோபாட்டிக்ஸ், ட்ரோன் தொழில்நுட்பம், விண்வெளி தொழில்நுட்பம், சைபர், எலக்ட்ரானிக்ஸ் போன்றவை, பாதுகாப்புத்துறையில் புரட்சியை ஏற்படுத்தி வருகின்றன.
போர்கள், பாரம்பரிய களங்களுக்கு அப்பால், விண்வெளி, சைபர், தகவல் பரிமாற்றம் என புதிய களங்களுக்கு நகர்கிறது. உக்ரைன்-ரஷ்யா மோதலில், ஒரு புதிய வழிமுறையாக ட்ரோன்கள் வெளிப்பட்டுள்ளன.உளவு, கண்காணிப்பு, தகவல்தொடர்பு முறைகள் போன்றவையும் மாறி வருகின்றன. இதனால், போரை ஒரு புதிய உச்சத்திற்கு கொண்டு செல்கின்றன. போர் அரங்குகளில் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளின் ஆற்றல் வியக்க வைக்கிறது.
ஆளில்லா அமைப்புகள் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றின் வருகை போரின் தன்மையை பாதிக்கின்றன. இந்நிலையில், பாதுகாப்புப்படைகள் கூட்டாகச் செயல்பட வேண்டும். சைபர் தாக்குதல்கள், தவறான தகவல் பிரச்சாரங்கள் மற்றும் பொருளாதாரப் போர் ஆகியவை ஒரு துப்பாக்கிச் சூடு கூட இல்லாமல் அரசியல்-ராணுவ இலக்குகளை அடையக் கூடிய கருவிகளாக மாறிவிட்டன.
இந்தியாவும், உலகமும் பல்வேறு வகையான பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்கின்றன. வடக்கு மற்றும் மேற்கு எல்லைகளில் நாம் தொடர்ந்து அச்சுறுத்தல்களை எதிர்கொள்கிறோம். நமது அண்டை நாடுகளின் மறைமுகப் போர் மற்றும் பயங்கரவாத அச்சுறுத்தல் அதிகரிக்கிறது. மேற்கு ஆசியாவில் நடந்து வரும் மோதல்கள் மற்றும் நமது இந்தோ பசிபிக் பகுதியில் நிலவும் புவி அரசியல் பதற்றங்கள் பாதுகாப்பபில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
இயற்கை பேரழிவுகள் மற்றும் காலநிலை மாற்ற விளைவுகள் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் திறன் முக்கியமானதாகி வருகிறது. ஒவ்வொரு நாளும் புதிய பாதுகாப்பு சவால்கள் எழுகின்றன, பிரதமரின் இலக்கான 2047-ம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த, சுயசார்புடன் கூடிய இந்தியாவை நோக்கி, நாம் நகருகிறோம். அவை பாதுகாப்பான இந்தியா மற்றும் வலுவான இந்தியா. இந்த இலக்குகளை அடைவதற்கான சவால்களை எதிர்கொள்ளும் அணுகுமுறையை இந்த கல்லூரி வழி நடத்த வேண்டும்.
நாட்டை பாதுகாக்க, அனைத்து பிரிவுகளும் ஒருங்கிணைந்து செயல்படவேண்டும்.ராஜதந்திர நடவடிக்கைகள், தகவல் பரிமாற்றம், ராணுவ, பொருளாதார மற்றும் தொழில்நுட்பக் களங்களின் ஒருங்கிணைப்பை உறுதி செய்வது முக்கியமாகும். நமது மக்களுக்கும் நாடுகளுக்கும் சிறந்த எதிர்காலத்தையும் செழிப்பையும் அடைவது எப்போதும் ஒரு கூட்டு முயற்சியாகவே இருக்கும்.
பத்து ஆண்டுகளுக்கு முன்பு, நமது பிரதமர் சாகர் என்ற தொலைநோக்குப் பார்வையால், இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தியுள்ளது. 2025ம் ஆண்டை ‘சீர்திருத்த ஆண்டாக’ கடைப்பிடிக்க பாதுகாப்பு அமைச்சகம் முடிவு செய்துள்ளது. முப்படை அதிகாரிகள் பயிற்சி கல்லூரியில் ‘டீப் பர்பிள்’ என்ற ஒரு பிரிவை அறிமுகப்படுத்திய பாதுகாப்புப் படைத் தலைவரின் முயற்சியை நான் பாராட்டுகிறேன்.
தொழில்முறை ராணுவக் கல்வியில் கூட்டு மற்றும் ஒருங்கிணைப்பை மேம்படுத்துவதில் இந்தப் பிரிவு ஒரு முன்னோடியாக இருக்கும். நீங்கள் இனி திட்டங்களை நிறைவேற்றுபவர்கள் மட்டுமல்ல, மாற்றத்தின் பொறுப்பாளர்கள், என்று அவர் பேசினார்.
இந்நிகழ்ச்சிக்குப் பின் முப்படை தளபதி ஜெனெரல் அணில் சவுகான், கல்லூரி தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் வீரேந்திர வாட்ஸ் மற்றும் பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். முன்னதாக வெலிங்டனில் உள்ள போர் நினைவு தூணில் பாதுகாப்புத்துறை அமைச்சர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.