புதுடெல்லி: பிஹார் மாநிலத்தின் பல மாவட்டங்களில் ஏற்பட்ட இடி, பலத்த மின்னல், சூறைக்காற்றால் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த இயற்கை சீற்றங்களில் சிக்கி, கடந்த 48 மணி நேரத்தில் 19 பேர் உயிரிழந்தனர்.
பிஹாரின் பல மாவட்டங்களில் புதன்கிழமை இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால், பொதுமக்கள் கடுமையாக சிரமத்துள்ளாகினர். தற்போதும், மீட்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. கனமழை, இடி, மின்னல் என வானில் ஏற்பட்ட திடீர் மாற்றத்தால், சில இடங்களில் உயிரிழப்பு சம்பவங்களும் பதிவாகியுள்ளது. இதுவரை 19 பேர் பரிதாபமாக உயிரிழந்து தெரியவந்துள்ளது. பிஹாரின் பெகுசராய் மாவட்டத்தில் 5 பேர், தர்பங்காவில் 5 பேர், மதுபானியில் 3 பேர் மற்றும் சஹர்சா மற்றும் சமஸ்திபூரில் தலா 2 பேர் மற்றும் லக்கிசராய் மற்றும் கயா மாவட்டங்களில் தலா ஒருவர் உயிரிழந்தனர்.
இறந்தவர்களின் குடும்பத்துக்கு பிஹார் முதல்வர் நிதிஷ்குமார் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். தர்பங்கா, மதுபானி, சமஸ்திபூர், முசாபர்பூர், சீதாமர்ஹி, ஷிவ்ஹார் மற்றும் கிழக்கு சம்பாரண் ஆகிய இடங்களில் பலத்த மின்னல், ஆலங்கட்டி மழை மற்றும் பலத்த காற்று வீசியதால் வேளாண் பயிர்கள் பெரும் சேதமடைந்துள்ளது. இதனால் உள்ளூர் விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
ஏப்ரல் 12-ஆம் தேதி வரை பிஹார் முழுவதும் மழை, மின்னல் மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், சில பகுதிகளில் ஆலங்கட்டி மழை மற்றும் பலத்த காற்று வீசும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) எச்சரித்துள்ளது.