உலகமெங்கும் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘ஸ்குயிட் கேம்’ வெப் தொடரின் இரண்டாவது சீசன் உறுதியாகியுள்ளது.
தென்கொரியாவின் சிரன் பிக்சர்ஸ் தயாரித்த ‘ஸ்குயிட் கேம்’ என்ற தொடர் கடந்த செப்டம்பர் மாதம் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியானது. நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் 111 மில்லியன் பார்வைகளைப் பெற்று உலகில் அதிகம் பேர் விரும்பி பார்த்த வெப் சீரிஸ் என்ற சாதனையை ‘ஸ்குயிட் கேம்’ படைத்தது. அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளில் பல்வேறு உள்ளூர் தொடர்களை, ஸ்குயிட் கேம் பின்னுக்குத் தள்ளியது. இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளிலும் இந்த தொடருக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது.
இத்தொடரின் இரண்டாவது சீசன் குறித்து தொடர்ந்து ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வந்த நிலையில், நெட்ஃப்ளிக்ஸ் இணை சிஇஓ டெட் சாரண்டோஸ் ‘ஸ்குயிட் கேம்’ இரண்டாவது சீசனை உறுதி செய்துள்ளார். சமீபத்தில் நடைபெற்ற ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் ‘ஸ்குயிட் கேம் சீசன் 2’ தொடர்பான ஒரு கேள்விக்கு பதிலளித்த அவர், ‘நிச்சயமாக இரண்டாவது சீசன் இருக்கிறது. ‘ஸ்குயிட் கேம் யுனிவர்ஸ்’ தொடங்கிவிட்டது’ என்று கூறியுள்ளார்.
இதேபோல ‘ஸ்குயிட் கேம்’ இயக்குநரான ஹ்வாங் டாங் – ஹ்யூக் சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசும்போது, “இத்தொடருக்கான இரண்டாவது சீசனுக்கு அதிக அழுத்தமும், அதிக எதிர்பார்ப்பும், அதிக அன்பும் இருந்து வருகிறது. நீங்கள் எங்களுக்கு இரண்டாம் சீசன் எடுப்பதைத் தவிர வேறு வழியில்லாமல் செய்து விட்டீர்கள்” என்று கூறியுள்ளார்.
இதன் மூலம் விரைவில் ‘ஸ்குயிட் கேம்’ இரண்டாவது சீசனுக்கான பணிகள் தொடங்கும் என்பது உறுதியாகியுள்ளது.