கோவை: அதிமுகவில் இருந்து விலகுவதாக, அக்கட்சியின் எம்ஜிஆர் இளைஞரணி மாநில இணைச் செயலாளராக பதவி வகித்து வரும் கோவையைச் சேர்ந்த இன்ஜினியர் சந்திரசேகர் அறிவித்துள்ளார். முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்கு நெருக்கமான இவரது விலகல் அறிவிப்பு கோவை அதிமுகவில் அதிர்ச்சியைக் கடத்தியுள்ளது.
கோவை வடவள்ளியைச் சேர்ந்தவர் இன்ஜினியர் சந்திரசேகர். இவர், அதிமுகவில் எம்ஜிஆர் இளைஞரணி இணைச் செயலாளராக பதவி வகித்து வருகிறார். இவரது மனைவி சர்மிளா. கோவை மாநகராட்சியின் 38-வது வார்டு அதிமுக கவுன்சிலராக உள்ளார். அதிமுகவின் தலைமை நிலைய செயலாளரும், முன்னாள் அமைச்சரும், எதிர்கட்சி கொறடாவுமான எஸ்.பி.வேலுமணிக்கு மிக நெருக்கமான நபராக இன்ஜினியர் சந்திரசேகர் இருந்து வருகிறார்.
தொடக்கத்தில், கோவை புறநகர் தெற்கு மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணி செயலாளராக இருந்தார். பின்னர், சில ஆண்டுகளுக்கு முன்னர், அதே அணிக்கு மாநில இணைச் செயலாளராக நியமிக்கப்பட்டார். இந்தச் சூழலில், சந்திரசேகர் அதிமுகவில் இருந்து விலகுவதாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள கடிதத்தில், ‘‘கடந்த 20 ஆண்டு காலம் அதிமுகவில் முழு அளவி்ல், உண்மையுடன் உழைத்து வந்தேன். கட்சியின் உத்தரவை கடமை தவறாமல் கடைபிடித்து காத்து வந்துள்ளேன். கட்சியில் எதிர்பார்ப்பு இன்றி பணியாற்றி உள்ளேன். மக்களுக்கான சேவை பணிகளிலும், மக்களோடு மக்களாக நின்று போராடி இருக்கிறேன். கட்சிக்காக நான் செய்த பணிகள் அனைவரும் அறிந்ததே.
தற்போது எனது தனிப்பட்ட பணி காரணமாக தொடர்ந்து கட்சிப் பணியில் என்னை ஈடுபடுத்திக் கொள்ள முடியாத சூழல் உள்ளது. எனவே, கட்சியின் அனைத்து வித பொறுப்புகளில் இருந்தும் என்னை முழுமையாக விடுவித்துக் கொள்கிறேன். கட்சியில் இருந்து விலகும் முடிவை பலத்த தயக்கத்துடன் எடுத்துள்ளேன். கட்சியில் எனக்கு வாய்ப்பு அளித்த, அங்கீகாரம் மற்றும் ஆதரவு வழங்கி, திறம்பட பணியாற்ற ஊக்கம் தந்த மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, பொதுச்செயலாளர் பழனிசாமி, முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆகியோருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். கட்சியின் தொண்டர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்’’எனக் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து கோவை அதிமுக நிர்வாகிகள் தரப்பில் கேட்ட போது,‘‘ இன்ஜினியர் சந்திரசேகரின் அறிக்கையை பார்த்து தான் அவர் கட்சியில் இருந்து விலகும் முடிவை எடுத்ததை அறிந்தோம். மாவட்ட செயலாளருக்கோ, பொதுச்செயலாளருக்கோ எந்த தகவலும் இதுவரை தெரிவிக்கவில்லை’’என்றனர்.
இன்ஜினியர் சந்திரசேகர், ஒப்பந்த நிறுவனம் நடத்தி வருகிறார். கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் மாநகராட்சி திட்டப்பணிகளை அவர் ஒப்பந்தம் எடுத்து நடத்தி வந்தார். அதிமுகவினர் அதிகாரப் பூர்வ நாளிதழான ‘நமது அம்மா’ நாளிதழின் வெளியீட்டாளராகவும் சந்திரசேகர் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், இவர் கட்சியில் இருந்து விலகியுள்ளதால், இவரது மனைவி சர்மிளா அதிமுக கவுன்சிலராக தொடர்வாரா?, என்ன முடிவு எடுப்பார் எனவும் கேள்வி எழுந்துள்ளது. இதற்கிடையே, அவரது விலகல் கடிதத்தை ஏற்றுக் கொள்ளாமல், அவரை சமாதானப்படுத்தும் முயற்சிகளிலும் உள்ளூர் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது