அலகாபாத்: உத்தர பிரதேச மாநிலத்தில் பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட நபருக்கு அலகாபாத் உயர் நீதிமன்றம், கடந்த மாதம் ஜாமீன் வழங்கி உள்ளது. மேலும், இந்த சம்பவத்துக்கு பாதிக்கப்பட்ட பெண் தான் காரணம் எனவும் நீதிமன்றம் பழி போட்டுள்ளது.
கடந்த செப்டம்பர் மாதம் பாதிக்கப்பட்ட பெண், தனது நண்பர்களுடன் சேர்ந்து மதுபான கூடத்துக்கு சென்றுள்ளார். அங்கு மது அருந்தியதில் அவருக்கு போதை ஏறியுள்ளது. அங்கிருந்து அவர் புறப்பட வேறொருவரின் துணை தேவைப்பட்டுள்ளது. அப்போது குற்றச்சாட்டுக்கு ஆளான நபர் தனது வீட்டுக்கு அந்த பெண்ணை அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதை அந்தப் பெண் தனது புகாரில் கூறியுள்ளார். போலீஸாரும் இதை முதல் தகவல் அறிக்கையில் பதிவு செய்துள்ளனர்.
குற்றச்சாட்டுக்கு ஆளான நபரின் வீடு நொய்டாவில் உள்ளது. இருப்பினும் அவர் அங்கு செல்லாமல் குருகிராமில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு பாதிக்கப்பட்ட பெண்ணை அழைத்து சென்றுள்ளார். அங்கு இரண்டு முறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும், வீட்டுக்கு செல்லும் வழியில் தகாத முறையில் சீண்டலில் ஈடுபட்டார். இதையும் பாதிக்கப்பட்ட பெண் புகாரில் கூறியுள்ளார்.
இந்த சூழலில் குற்றம் சுமத்தப்பட்டவரின் தரப்பில் வாதாடிய வழக்கறிஞர் தரப்பு, இந்த வழக்கு பாலியல் வன்கொடுமை குற்றத்தின் கீழ் வராது என்றும், ஏனெனில் இருவரின் சம்மதத்துடன் தான் இது நடந்தது என்றும், குற்றம் சுமத்தப்பட்ட நபர் மீது குற்ற பின்புலம் எதுவும் இல்லை என்றும், கடந்த டிசம்பர் (2024) முதல் சிறையில் உள்ள அவருக்கு ஜாமீன் கிடைத்தால் அதை தவறாக பயன்படுத்த மாட்டார், மேலும் வழக்கு விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பார் என நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
பாதிக்கப்பட்ட பெண்ணின் குற்றச்சாட்டு உண்மை என்று ஏற்றுக்கொள்ளப்படுகிறது. இருந்தாலும் இந்த சம்பவத்துக்கு அவரே காரணம் என இந்த நீதிமன்றம் கருதுகிறது. அவரது புகாரும் இதை உறுதி செய்கிறது. பாதிக்கப்பட்டவரின் மருத்துவ பரிசோதனையில், பாலியல் வன்கொடுமை குறித்து மருத்துவர் எதுவும் தெரிவிக்கவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஜாமீன் வழங்கியபோது அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி சஞ்சய் குமார் சிங் கூறியுள்ளார். பாதிக்கப்பட்ட பெண் மீதான நீதிமன்றத்தின் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
தொடரும் சர்ச்சை: முன்னதாக, உத்தர பிரதேசத்தில் போக்சோ வழக்கு ஒன்றில் அலாகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி ராம் மனோகர் நாராயண் மிஸ்ரா கடந்த மாதம் 17-ம் தேதி பிறப்பித்த உத்தரவில், “சிறுமியின் மார்பகங்களைப் பிடித்து, பைஜாமாவின் கயிற்றை அவிழ்ப்பது, பாலியல் வன்கொடுமை அல்லது பாலியல் வன்கொடுமை முயற்சி குற்றச்சாட்டுக்கு போதுமானது அல்ல” என்று தீர்ப்பளித்திருந்தார். இது நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பல அரசியல் கட்சிகள் இத்தீர்ப்புக்கு கண்டம் தெரிவித்திருந்தன. இந்த உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.