பழநி: பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழநியில் அதிகாலை முதலே பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் உப கோயிலான திருஆவினன்குடி கோயிலில் பங்குனி உத்திர திருவிழா ஏப்.5-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. விழா தொடங்குவதற்கு முன்கூட்டியே ஈரோடு மாவட்டம் கொடுமுடி காவிரி ஆற்றில் இருந்து பக்தர்கள் தீர்த்த காவடியுடன் வரத் தொடங்கினர். விழாவின் 6-ம் நாளான நேற்று (ஏப்.10) மாலை திருக்கல்யாண உற்சவம் கோலாகலமாக நடைபெற்றது.


இன்று வெள்ளிக்கிழமை (ஏப்.11) பங்குனி உத்திரத்தை முன்னிட்டு பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலில் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு, விஸ்ரூப தரிசனம்,காலை 4.30 மணிக்கு விளா பூஜை நடைபெற்றது. சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. பழநி மலைக்கோயில் மற்றும் பாராவேல் மண்டபம் முழுவதும் 2 டன்னுக்கு பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அதிகாலை முதலே பக்தர்கள் பழநியில் குவிய தொடங்கினர்.


பழநி கிரிவல வீதிகள், சந்நிதி வீதி உட்பட பழநி முழுவதும் காவி மற்றும் பச்சை உடை அணிந்து வந்த பக்தர்கள் வெள்ளத்தில் பழநி தத்தளித்தது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை காவடி எடுத்து கிரிவல வீதிகளில் ஆடி வந்தனர். மலைக்கோயிலுக்கு செல்ல யானைப்பாதை ஒருவழிபாதையாக மாற்றப்பட்டது. மலையில் இருந்து கீழே இறங்கும் பக்தர்கள் படிப்பாதை வழியாக இறங்க அனுமதிக்கப்பட்டனர்.
விரைவு தரிசன கட்டண சீட்டுகளான ரூ.20 மற்றும் ரூ.200 ரத்து செய்யப்பட்டுள்ளதால், அனைவரும் இலவச தரிசனத்தில் சுவாமி தரிசனம் செய்தனர். சண்முகநதி, இடும்பன் குளத்தில் புனித நீராடும் பக்தர்கள் தண்ணீரில் மூழ்கி உயிரிழப்பதை தடுக்க ரப்பர் படகில் தீயணைப்பு வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். பக்தர்களின் வசதிக்காக அதிகாலை 2 மணி முதல் முடி காணிக்கை செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.


கூட்டத்தில் தொலைந்து போன குழந்தைகள், பக்தர்களை எல்இடி திரையில் புகைப்படத்துடன் வெளியிட்டு அவர்களை குடும்பத்துடன் சேர்க்க, காவல் துறை சார்பில் பழநி மலைக்கோயில், கிரிவலப்பாதை, பேருந்து நிலையம் உட்பட 7 இடங்களில் பெரிய ‘எல்இடி’ திரைகள் அமைக்கப்பட்டுள்ளன.குற்ற சம்பவங்களை தடுக்க பழநி அடிவாரம், படிப்பாதை, யானைப்பாதை, பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களில் 420 சிசிடிவி கேமராக்கள் பொருத்தி, போலீஸார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
விழாவின் முக்கிய நிகழ்வான பங்குனி உத்திரத் தேரோட்டம் இன்று (ஏப்.11) மாலை நடைபெறுகிது. பிற்பகல் 1 மணிக்கு மேல் தேரேற்றம் நடைபெறுகிறது. தொடர்ந்து, மாலை 4.30 மணிக்கு மேல் கிரிவீதிகளில் தேரோட்டம் நடைபெற உள்ளது. இதையொட்டி, 2,000 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.