நடப்பு ஐபிஎல் சீசனின் 25-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி கொல்கத்தா அணி அபார வெற்றி பெற்றது
சென்னை – சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்து வீச முடிவு செய்தது. கான்வே மற்றும் ரச்சின் ரவீந்திரா இன்னிங்ஸை ஓபன் செய்தனர். காயம் காரணமாக ருதுராஜ் கெய்க்வாட் இந்த சீசனில் இருந்து விலகி உள்ளார். அதனால் அணியை தோனி வழிநடத்துகிறார். சிறப்பான தொடக்கத்தை சிஎஸ்கே ஓப்பனர்கள் கொடுப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு 4-வது ஓவரில் தவிடு பொடியானது. கான்வே, 12 ரன்கள் எடுத்து எல்பிடபிள்யூ முறையில் மொயின் அலி வீசிய பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்த ஓவரில் நான்கே ரன்களில் ரச்சின் வெளியேறினார். அவரை ராணா அவுட் செய்தார்.
முதல் 6 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு வெறும் 31 ரன்களை மட்டுமே எடுத்தது சிஎஸ்கே. விஜய் சங்கருக்கு இரண்டு கேட்ச் வாய்ப்புகளை கொல்கத்தா வீரர்கள் நழுவவிட்டனர். அவர் 29 ரன்களில் ஆட்டமிழந்தார். வருண் சக்கரவர்த்தி அவரது விக்கெட்டை தூக்கினார். ரன் சேர்க்க தடுமாறிய ராகுல் திரிபாதி 16 ரன்களில் வெளியேறினார். அவரை போல்ட் ஆக்கினார் நரேன்.
தொடர்ந்து அஸ்வின் (1), ஜடேஜா (0), இம்பேக்ட் வீரராக வந்த தீபக் ஹூடா (0), தோனி (1), நூர் அகமது (1) ரன்னில் ஆட்டமிழந்தனர். இந்த இன்னிங்ஸில் மொத்தமாக 8 பவுண்டரி மற்றும் 1 சிக்ஸர் மட்டுமே சிஎஸ்கே எடுத்தது. ஷிவம் துபே 29 பந்துகளில் 31 ரன்கள் எடுத்தார். 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 103 ரன்கள் எடுத்தது சென்னை சூப்பர் கிங்ஸ்.
இந்த ஆட்டத்தில் வெற்றி பெற 104 ரன்கள் தேவை என்ற நிலையில் கொல்கத்தா களமிறங்கியது, இதில் முதலில் இறங்கிய டிகாக், சுனில் நரேன் இருவரும் நிதானமாக ஆடி ஸ்கோரை ஏற்றினர். டிகாக் 23 ரன்களும் சுனில் நரேன் 44 ரன்களும் எடுத்து வெளியேறினர். அடுத்து இறங்கிய ரஹானே 20, ரிங்கு சிங் 15 என 10.1 ஓவரிலேயே நிர்ணையிக்கப்பட்ட இலக்கை கடந்து வெற்றி பெற்றது கொல்கத்தா.