மும்பை: ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை 0.25% குறைப்பதாக அறிவித்ததையடுத்து கடனுக்கான வட்டி விகிதத்தை வங்கிகள் அடுத்தடுத்து குறைக்கத் தொடங்கியுள்ளன. இந்த நடவடிக்கை வீடு, வாகன கடன் வாங்குவோர் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதன்படி, இந்தியன் வங்கி ரெப்போவுடன் இணைந்த கடனுக்கான வட்டி விகிதத்தை (ஆர்பிஎல்ஆர்) 9.05 சதவீதத்திலிருந்து 8.7 சதவீதமாக குறைப்பதாக அறிவித்துள்ளது. குறைக்கப்பட்ட இந்த வட்டி விகிதம் நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று, பஞ்சாப் நேஷனல் வங்கியும் தனது ஆர்எல்எல்ஆர் வட்டி விகிதத்தை 9.1 சதவீதத்திலிருந்து 8.85 சதவீதமாக குறைத்துள்ளது. இது, ஏப்ரல் 10-ம் தேதியிலிருந்து அமலுக்கு வந்துள்ளது.
பேங்க் ஆப் இந்தியா ஆர்பிஎல்ஆர் கடன் வட்டி விகிதத்தை 9.1 சதவீதத்திலிருந்து 8.85 சதவீதமாக குறைத்துள்ளது. குறைக்கப்பட்ட இந்த வட்டி விகிதம் ஏப்ரல் 9-ம் தேதியிலிருந்து அமலாகியுள்ளது.
ரெப்போ வட்டி விகிதத்தை குறைப்பதற்கு பணவியல் கொள்கை குழு ஒருமனதாக ஒப்புதல் தெரிவித்தது. இதனால், வங்கிகளிடையே பணப்புழக்கம் அதிகரித்து வாடிக்கையாளர்கள் குறைந்த வட்டியில் கடன்பெறுவதற்கு வழிஏற்படும் என்பது ரிசர்வ் வங்கியின் கணிப்பு. ரெப்போ வட்டி விகிதத்தின் பலன்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்க வேண்டும் என வங்கிகளிடம் ரிசர்வ் வங்கி ஏற்கெனவே வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.