ஏப்.8: பிரம்ம குமாரிகள் அமைப்பின் தலைவர் தாதி ரத்தன் மோகினி (100) உடல்நலக் குறைவால் அகமதாபாத்தில் காலமானார்.
ஏப்.8: தமிழக அரசின் 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் அவற்றைக் குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் பரிந்துரை செய்தது சட்ட விரோதம் என அறிவித்த உச்ச நீதிமன்றம், அந்த 10 மசோதக்களும் சட்டமாகி அமலுக்கு வந்துவிட்டதாக உத்தரவிட்டது. மேலும் மசோதாக்கள் மீது ஆளுநர் முடிவு எடுக்க காலக்கெடுவையும் உச்ச நீதிமன்றம் நிர்ணயித்தது.
ஏப்.8: டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத் துறை நடத்திய சோதனையை எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றத்தை திடீரென நாடியதற்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர்.
ஏப்.9: காங்கிரஸ் மூத்தத் தலைவரும் இலக்கியச் செல்வர் என்று அழைக்கப்பட்டவருமான குமரிஅனந்தன் (93) உடல்நலக் குறைவால் காலமானார். ஒரு முறை மக்களவை உறுப்பினர், 4 முறை சட்டமன்ற உறுப்பினர், தமிழ காங்கிரஸ் கமிட்டி தலைவர் உள்ளிட்ட பொறுப்புகளை வகித்தவர் இவர்.
ஏப்.9: சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கடந்த 2 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்.
ஏப்.9: நீட் தேர்விலிருந்து விலக்கு பெறுவதற்கு தொடர்பாக சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்வது தொடர்பாக அனைத்து சட்டப்பேரவைக் கட்சித் தலைவர்கள் கூட்டம் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.
ஏப்.9, 10: மும்பை 26/11 தீவிரவாத தாக்குதலில் தொடர்புடைய அமெரிக்காவில் வசித்து வந்த தீவிரவாதி ராணாவை இந்தியாவிடம் அமெரிக்கா ஒப்படைத்தது. இதையடுத்து அமெரிக்காவிலிருந்து அவர் இந்தியா அழைத்து வரப்பட்டார்.
ஏப்.10: பாமகவின் தலைவராக தானே இருக்கப் போவதாகவும், அன்புமணி செயல் தலைவராக இருப்பார் என்றும் பாமகவின் நிறுவனரான டாக்டர் ராமதாஸ் அறிவித்தார்.
ஏப்.10: தமிழகத்தைச் சேர்ந்த எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணனுக்கு பாரதிய பாஷா விருது அறிவிக்கப்பட்டது.
ஏப்.10: மறைந்த முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் (திமுக) மீதான சொத்துக்குவிப்பு வழக்கிலிருந்து அவருடைய குடும்பத்தினரை விடுவித்தது தவறு என்றும் மீண்டும் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்து விசாரணையை தொடங்க சேலம் மாவட்ட நீதிமன்றத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஏப்.11: தமிழக பாஜகவின் புதிய தலைவராக நயினார் நாகேந்திரன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஏப்.12: ஆளுநர் அனுப்பும் மசோதாக்கள் தொடர்பாக குடியரசுத் தலைவர் 3 மாதங்களுக்குள் முடிவு எடுக்க வேண்டும்; தாமதம் ஏற்பட்டால் காரணம் கூற வேண்டும் என்று தமிழக ஆளுநருக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.
ஏப்.12: பல்கலைக்கழக துணைவேந்தர்களை அரசே நியமிக்கும் வகையில் இயற்றப்பட்ட 10 சட்டங்களும் உச்ச நீதிமன்ற தீர்ப்பு மூலம் அமலுக்கு வந்த நிலையில், இதற்கான அறிவிக்கை தமிழக அரசிதழில் வெளியிடப்பட்டது.
ஏப்.13: ஆந்திரம், தெலங்கானா மக்களால் ‘வனஜீவி’ என்றழைக்கப்பட்ட ராமய்யா (87) காலமானார். கடந்த 50 ஆண்டுகளில் ஒரு கோடி மரக்கன்றுகளை நட்டவர் இவர். 2017இல் இவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.
ஏப்.14: வங்கியில் ரூ.13,000 கோடி கடன் வாங்கி வெளிநாட்டுக்கு தப்பிய இந்திய வைர வியாபாரி மெகுல் சோக்ஸி பெல்ஜியத்தில் கைது செய்யப்பட்டார். அவரை இந்தியாவுக்கு நாடு கடத்தும் முயற்சியில் சிபிஐ அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
ஏப்.14: அமெரிக்காவின் புளோரிடாவில் நடைபெற்ற உலகக் கோப்பை வில்வித்தை ஆடவர் ரீகர்வ் பிரிவில் இந்திய அணி வெள்ளி வென்றது. இறுதிப் போட்டியில் இந்திய அணி சீனாவிடம் 1 -5 என்ற கணக்கில் தோல்வியடைந்தது.