ஹர்தோய் (உ.பி) “மேற்கு வங்கம் பற்றி எரிகிறது. ஆனால், அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜியோ அமைதியாக இருக்கிறார்” என்று முர்ஷிதாபாத் வன்முறையைச் சுட்டிக்காட்டி உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கடுமையாக விமர்சித்துள்ளார்.
உத்தரப் பிரதேசத்தின் ஹர்தோய் நகரில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றிய முதல்வர் யோகி, “மேற்கு வங்கம் பற்றி எரிகிறது. மாநில முதல்வர் அமைதியாக இருக்கிறார். கலவரக்காரர்களை ‘அமைதியின் தூதர்கள்’ என்று அவர் அழைக்கிறார். பலத்தின் மொழியை மட்டுமே புரிந்துகொள்பவர்கள், வார்த்தைகளைக் கேட்க மாட்டார்கள். அமைதியின்மையை உருவாக்க மதச்சார்பின்மை என்ற பெயரில், கலவரக்காரர்களுக்கு முழு சுதந்திரத்தையும் அவர்கள் வழங்கியுள்ளனர்.
கடந்த ஒரு வாரமாக முழு முர்ஷிதாபாத்தும் தீப்பிடித்து வருகிறது. ஆனால் அரசாங்கம் அமைதியாக இருக்கிறது. இத்தகைய அராஜகங்கள் கட்டுக்குள் கொண்டுவரப்பட வேண்டும். அப்பகுதியில் சிறுபான்மை இந்துக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக மத்திய படைகளை அனுப்பியதற்காக அங்குள்ள நீதித் துறைக்கு நான் நன்றி கூறுகிறேன். முர்ஷிதாபாத்தில் நடந்த கலவரம் குறித்து காங்கிரஸ் அமைதியாக உள்ளது. சமாஜ்வாதி கட்சியும் அமைதியாக உள்ளது.
வக்பு திருத்தச் சட்டத்தை நிறைவேற்றியதன் மூலம் ஏழை மக்களின் நிலம் சூறையாடப்படுவதை முடிவுக்குக் கொண்டு வந்த பிரதமர் மோடி மற்றும் அமித் ஷாவுக்கு நாங்கள் நன்றி கூறுகிறோம். இப்போது, மீட்கப்பட்ட நிலம் மருத்துவமனைகள், ஏழைகளுக்கான வீடுகள், பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களைக் கட்டப் பயன்படுத்தப்படும். நிலம் கொள்ளையடிக்கப்படுவது முடிவுக்கு வந்துவிட்டது. அதனால்தான் இவர்கள் வருத்தமடைந்துள்ளனர். இவர்கள் பொதுமக்களை தவறாக வழிநடத்த முயற்சிக்கிறார்கள்,” என்று விமர்சித்துள்ளார்.
வங்கதேசத்தை ஒட்டிய, முஸ்லிம்கள் அதிகமாக வசிக்கக்கூடிய முர்ஷிதாபாத் மாவட்டத்தில் வக்பு திருத்தச் சட்டத்தை எதிர்த்து நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதில், 3 பேர் கொல்லப்பட்டவர், பலர் காயமடைந்தனர், பலரது சொத்துகள் கடுமையாக சேதப்படுத்தப்பட்டன. திரிணமூல் காங்கிரஸின் ஆதரவு காரணமாகவே போராட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபட்டு சிறுபான்மை இந்துக்களை தாக்கியதாக பாஜக குற்றம் சாட்டி உள்ளது.
இதனிடையே, முர்ஷிதாபாத்தில் வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிலைமை சீரடைந்துள்ளதால் எந்த வதந்திகளையும் நம்ப வேண்டாம் என்று பொதுமக்களை மாநில காவல் துறை கேட்டுக்கொண்டுள்ளது. தற்போதைய நிலைமை குறித்து தெரிவித்த தெற்கு வங்க காவல் துறையின் ஏடிஜி சுப்ரதிம் சர்க்கார், “இப்போது நிலைமை இயல்பாக உள்ளது. அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர். சிஆர்பிஎஃப், மாநில காவல் துறை மற்றும் கூட்டுப் படைகள் நிறுத்தப்பட்டுள்ளன. வதந்திகளைப் பரப்ப வேண்டாம் என்று அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம். யாருக்கேனும் பாதிப்பு ஏற்பட்டால் எந்த நேரத்திலும் எங்களைத் தொடர்பு கொள்ளலாம்” என்று தெரிவித்துள்ளார்.