லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான சிஎஸ்கேவின் ‘கம்பேக்’ வெற்றி, சிஎஸ்கேவின் முயற்சியினால் அடைந்த வெற்றி என்பதை விட, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் சமரச உத்திகளினால் அடைந்த வெற்றி என்பது போலவே தெரிந்தது.
லக்னோ பேட்டிங் ஆடும்போது பெரிதாக எதுவும் தீவிரம் காட்டவில்லை. அவர்களின் உடல்மொழியே அதற்குச் சான்று. ரிஷப் பந்த் கேப்டன்ஸ் இன்னிங்ஸ் ஆடுகிறேன், பொறுப்பாக ஆடுகிறேன் என்று ஆடும்போதே தெரிந்தது, ஏதோ ஒரு மேட்ச் போலக் காட்டுவோம் என்று. தோனியின் பேட்டிங் படுதோல்வி, அவர் கேப்டனாக இல்லாததால்தான் தோற்கிறது என்பது போன்ற வெற்றுச் சொல்லாடல்களை உருவாக்கி, அவரை மீண்டும் கேப்டனாக்கி இருக்கிறார்கள். ருதுராஜ் ‘காயம்’!
லக்னோ பேட்டிங்கில் பெரிய தீவிரம் காட்டுவதில்லை என்பதைக் கூட சிஎஸ்கே ரசிகர்களும் ஐபிஎல் ஆதரவு ஊடகங்களும் சிஎஸ்கேவின் அபாரப் பந்து வீச்சு, டைட் பந்து வீச்சு என்று கூறலாம். ஆனால் ரிஷப் பந்த் கேப்டன்சி உத்தியையும், தோனி இறங்கிய பிறகு ஏற்படுத்திய கள வியூகங்களும், பந்து வீச்சை யாரிடம் கொடுத்தார் என்பதும் நிச்சயம் இந்தப் போட்டியின் நம்பகத்தன்மையை குலைப்பதாகவே உள்ளன.
இதற்குக் காரணங்கள் உள்ளன. சிஎஸ்கேவுக்கு 5 ஓவர்களில் 56 ரன்கள் தேவைப்பட்டது. அப்போதுதான் தோனி, துபேயுடன் இணைகிறார். லெக் ஸ்பின்னர் ரவி பிஷ்னோய் 3 ஓவர் 18 ரன்கள் 2 விக்கெட்டுகள் என்று அசத்தினார். ஆனால், அவருக்கு 4வது ஓவர் கொடுக்கவில்லை. இது மிகப் பெரிய சர்ச்சைக்குரிய விஷயம் என்பதோடு போட்டியின் மீதான நம்பகத்தன்மையையும் கேள்விக்குள்ளாக்குகிறது.
ராத்தி, மார்க்ரம் பந்து வீசி 4 ஓவர்களை முடித்தனர். ஆவேஷ் கானுக்கு 3 ஓவர்களும், ஷர்துலுக்கு 2 ஓவர்களும் பாக்கி உள்ளன. பிஷ்நோய்க்குக் கொடுக்காமல் ஆவேஷிடம் கொடுத்தார் பந்த். அந்த ஓவரில் 12 ரன்கள். தொடர்ந்து பிஷ்நோய்க்கு 4-வது ஓவர் கொடுக்காமல் வேகப்பந்து வீச்சுக்கே ஓவர்களைக் கொடுத்தார் பந்த்.
இந்தத் தொடர் மட்டுமல்ல, கடைசி 2-3 தொடர்களாகவே தோனி இறங்கினால் அவரைத் தடவ வைப்பதற்கு ஸ்பின் பவுலர்களுக்குக் கொடுப்பதுதான் எதிரணிக் கேப்டன்களின் உத்தியாக இருந்து வந்துள்ளது. இந்தத் தொடரில் சஞ்சு சாம்சன் அன்று மஹீஷ் தீக்சனாவிடம் 18-வது ஓவரைக் கொடுத்தார். அப்போது சிஎஸ்கேவுக்கு 40-45 ரன்கள் தேவைப்பட்டது. தீக்சனா அந்த ஓவரை டைட்டாக வீசிக் கட்டுப்படுத்தினார்.
டெல்லி கேப்பிடல்ஸ் கேப்டன் அக்சர் படேல் 17-வது ஓவரை வீசினார். அக்சர் வெறும் 5 ரன்களையே கொடுத்தார். மீண்டும் பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் ஸ்ரேயஸ் அய்யர் சிஎஸ்கே அணிக்கு 24 பந்துகளில் 68 ரன்கள் தேவைப்பட்ட போது யஜுவேந்திர செஹலிடம் கொடுத்தார். குறிப்பாக இந்த 3 ஓவர்களில் தோனி ஒரு பவுண்டரி கூட அடிக்கவில்லை என்பதான் கவனிக்கத்தக்கது.
கிரிக் இன்போ புள்ளிவிவரங்களின்படி 2020 முதலே தோனி ஸ்பின்னுக்கு எதிராக ஸ்ட்ரைக் ரேட் 94 தான் வைத்துள்ளார். வேகப்பந்து வீச்சை ஏன் கொடுத்தீர்கள் என்று கேட்டால் ஷிவம் துபே கிரீசில் இருந்தார் என்பார்கள், துபேவும் இந்தத் தொடரில் சரியாக ஆடவில்லை. தோனிக்கு ஸ்பின் பந்து வீச்சை ஆட வரவில்லை என்றால் ஸ்பின்னைத்தானே கொடுக்க வேண்டும், அதுதானே லாஜிக். ஆனால், இது ஐபிஎல் லாஜிக்.
அதோடு தோனிக்கு கள வியூகம் அமைத்த விதமும் ‘அடிக்கட்டும் பரவாயில்லை’ என்பது போலவே இருந்தது. சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும். கிரிக்கெட் அதன் சவாலான தன்மை, பேட்டுக்கும் பந்துக்குமான சரி சமமான போட்டி தனிநபர் திறமை என எத்தனையோ உள்ளன. இவற்றையெல்லாம் குழி தோண்டிப் புதைத்து சில பல தொழிலதிபர்கள் ஆடும் ஆட்டமாக, வியாபாரமாக மாறிவிட்டால் அதில் என்ன சுவாரஸ்யம் இருக்க முடியும்?